Header Ads Widget

பாட்னா மீட்டிங் : எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷுக்கு முதல் வெற்றி! - சாத்தியமானது எப்படி?

‘மோடி ஆட்சியை அகற்ற வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் பாட்னாவில் ஜூன் 23-ம் தேதி ஒன்றுகூடவிருக்கிறார்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முன்முயற்சியில் நடைபெறவிருக்கும் கூட்டம், தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி

பாட்னா கூட்டத்தின் கதாநாயகனே நிதிஷ்குமார்தான். ஏனெனில், ஒன்றுசேர வாய்ப்பே இல்லை என்றிருந்த கட்சிகளையெல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவருதை அவர் சாத்தியப்படுத்தியிருக்கிறார். பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும், உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்ற நிலைமை கடந்த மாதம்வரை இருந்தது. அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. அதற்கு, நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சியே முக்கியக் காரணம்.

தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிராக பெரும்பாலான கட்சிகள் ஒன்றுகூடுவது தேசிய அரசியலில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அதே நேரம், இந்த நிகழ்வால் பெரிய விளைவு ஏற்பட வேண்டுமென்றால், கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் உச்ச பதவிகளில் இருக்கும் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும். ஆனால், முதலில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவோ, ராகுல் காந்தியோ இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இல்லை. ஆனால், கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கறார் காட்டியதன் மூலம், கார்கேவின் பங்கேற்பை உறுதிசெய்திருக்கிறார் நிதிஷ் குமார்.

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் உட்பட 16 முதல் 20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட ஒரு சில தலைவர்களைத் தவிர மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களோ, வேறு கட்சிகளின் தலைவர்களோ இதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தால், இத்தனை கட்சிகள் சம்மதித்திருக்குமா என்பது சந்தேகம்தான். மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமாருக்கு எல்லா கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்பு இருப்பதால்தான், இது சாத்தியமாகியிருக்கிறது.

நிதிஷ்குமார்

ஜூன் 12-ம் தேதி என்றுதான் முதலில் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் கார்கேவும், முதல்வர் ஸ்டாலினும் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றிவையுங்கள் என்று கேட்டுக்கொண்டதால், ஜூன் 23-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று நிதிஷ்குமார் அறிவித்திருக்கிறார். கூட்டம் நடைபெறும் இடத்திலும் மாற்றம் இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இமாச்சலப்பிரதேசத்திலுள்ள சிம்லா தேர்வுசெய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாட்னாவிலேயே கூட்டம் நடைபெறும் என்பதை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உறுதிசெய்திருக்கிறார். எதிர்க் கட்சிகளின் கூட்டத்துக்கு இத்தனை தலைவர்கள் வருகை தருவதை உறுதிப்படுத்தியிருப்பது நிதிஷ்குமாரின் முயற்சிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என்று பார்க்கப்படுகிறது.!



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்