கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ-யை அணைத்தனர். ஆனாலும் ஒரு கம்பார்ட்மென்ட் முழுவதும் எரிந்து நாசமானது. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி வந்த இதே எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடைபெற்றது.

எலத்தூர் ரயில் நிலையத்தில் நடந்த அந்த சம்பவத்தில் டெல்லியைச் சேர்ந்த ஷாருக் ஷைஃபி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதே ரயிலில் மீண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்ததன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
ரயிலில் தீ வைக்கப்பட்ட அன்றே கண்காணிப்ப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரயிலில் தீ வைத்தது அந்த நபர்தான் என உறுதியாகி உள்ளது. இதையடுத்து ரயில் எரிப்பு வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிரஸூன் ஜித் ஸிக்தர்(40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரயிலுக்கு தீ வைத்தது உறுதியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி நீரஜ் குமார் குப்தா கூறுகையில், "கொல்க்கத்தாவில் வெயிட்டராக வேலை பார்த்த பிரஸூன் ஜித் ஸிக்தர் சில நாள்களுக்கு முன்பு கேரளா வந்துள்ளார்.

இவர் மூன்று நாள்களுக்கு முன்பு தலச்சேரியில் இருந்து நடந்து கண்ணூருக்குச் சென்றுள்ளார். கண்ணூர் ரயில் நிலையத்தில் அவர் யாசகம் பெற்று வந்துள்ளார். அவரை ரயில் நிலைய பிளாட்பார்மில் யாசகம் பெற அதிகாரிகள் அனுமதிக்காததால் கோபத்தில் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ள அந்த நபர் தீப்பெட்டியை பயன் படுத்தி ரயிலில் தீ வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ வைப்பு சம்பவத்தில் பிரஸூன் ஜித் ஸிக்தரின் பின்னால் வேறு யாரும் இல்லை" என்றார்.
from Latest news
0 கருத்துகள்