ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் போட்டி. அங்கு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும், பா.ஜ.க 71 இடங்களிலும் வெற்றிபெற்றன. அப்போது, முதல்வர் பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று சச்சின் பைலட் முனைப்பு காட்டினார். ஆனால், சீனியரான அசோக் கெலாட்டுக்கே முதல்வராகும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஆனாலும், இருவருக்கும் இடையிலான உள்கட்சி மோதல் தொடர்ந்து நீடித்தது. கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டையும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் ஓரம்கட்டுவதாக சச்சின் தரப்பு புகார் எழுப்பியது. அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் தரப்பு போர்க்கொடி தூக்கியது. பிரச்னை எழுப்பும்போதெல்லாம் சச்சின் தரப்புடன் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 2020-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
சமீபகாலமாக, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை எழுப்பி போராட்டத்திலும் ஈடுபட்டார் சச்சின் பைலட். இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைப் போல, ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இருவரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்தே தேர்தலை எதிர்கொள்வோம் என்று அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் அறிவித்தனர். ஆனாலும், அந்த சமாதானம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தற்போது, காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சியை சச்சின் பைலட் ஆரம்பிக்கப்போகிறார் என்று செய்திகள் பரபரக்கின்றன.
சச்சின் பைலட்டின் தந்தையான ராஜேஷ் பைலட், காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர், 2000-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார் சச்சின் பைலட். தற்போது காங்கிரஸிலிருந்து வெளியேற முடிவுசெய்து, தந்தையின் நினைவு தினமான ஜூன் 11-ம் தேதி புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறார் என்று செய்திகள் பரபரக்கின்றன.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி, புதிய கட்சியைத் தொடங்க சச்சின் பைலட் திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து ஜூன் 11-ம் தேதி அவர் அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை, அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கினால், அது காங்கிரஸுக்கு என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று இப்போது அரசியல் நோக்கர்கள் அலச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி மோதல்கள் காரணமாகவும், உரிய வாய்ப்பு வழங்கப்படாததாலும் பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். காங்கிரஸிலிருந்து வெளியே திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சி கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியலைத்தான் செய்தார்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிவிட்டார் மம்தா பானர்ஜி. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் என்கிற புதிய கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பலம் சரிந்தவிட்டது.
கிட்டத்தட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் தற்போது சந்தித்துவருவதைப் போன்ற பிரச்னையைத்தான் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. அங்கு, முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸில் முக்கிய இடத்தைப் பிடித்தார். ஆனால், அவருக்கு முதல்வர் பதவியை வழங்க காங்கிரஸ் தலைமை முன்வரவில்லை. பொறுமையிழந்த ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸிலிருந்து வெளியேறி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மாநிலம் முழுவதும் பாதையாத்திரை சென்று மக்களைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. அதன் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய அவர், ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார். ஆனால், அங்கு காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துவிட்டது.
ஒருவேளை காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கினால், அங்கு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நிச்சயம் சரியும். மேலும் அது எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்கும். அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். கர்நாடகாவைப் போல, ராஜஸ்தானிலும் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்கிற காங்கிரஸின் கனவு ஈடேறுவதற்கான வாய்ப்பு நிச்சயம் குறையும்.!
from India News https://ift.tt/oTb7ct2
via IFTTT

0 கருத்துகள்