மதுரை மாவட்டம், வரிச்சூரைச் சேர்ந்த 'வரிச்சூர் செல்வத்தை' கொலை வழக்கில் விருதுநகர் மாவட்டக் காவல்துறையினர் நேற்று காலை கைதுசெய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்ட வழக்கின் பின்னணி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "விருதுநகரை அடுத்த அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியான இவர், மதுரை மாவட்டம், கருப்பையூரணியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் செந்தில்குமார் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து அவரின் மனைவி முருகலட்சுமி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தனது கணவரைக் கண்டுபிடித்து தரக்கோரி 'ஹேபியஸ் கார்பஸ்' மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில்குமாரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, செந்தில்குமாரைக் கண்டுபிடித்து மீட்க மாவட்ட நிர்வாகம் தனிப்படை அமைத்தது. ஆனால் அவர் குறித்த தகவல்களைத் திரட்டுவதில் ஏற்பட்ட பின்னடைவால், செந்தில்குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு, மதுரை மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் கவனத்துக்கு வந்தபோது, அவரது உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை சரக காவல் உதவிக் கண்காணிப்பாளர் கருண் காரட் தலைமையில் புதிதாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் செந்தில்குமார் மாயமாவதற்கு முன்பு வரிச்சூர் செல்வத்திடம் பேசியதும், அதைத் தொடர்ந்து செந்தில்குமார், அடியாட்களால் கடத்திச்செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே செந்தில்குமார் மாயமானதில், வரிச்சூர் செல்வத்துக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதிசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்த முடிவுசெய்தனர்.
இதற்காக மதுரை மாவட்டத்துக்கு விரைந்த தனிப்படையினர், வரிச்சூர் செல்வத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவரை இன்று (22-06-2023) காலை சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வரிச்சூர் செல்வத்தின் உறவினர் பெண் ஒருவருடன் செந்தில்குமாருக்குத் திருமணம் மீறிய உறவு இருந்ததாம், இந்த விவகாரம் வரிச்சூர் செல்வத்துக்குத் தெரியவர, செந்தில்குமாரைக் கண்டித்து வெளியேற்றியிருக்கிறார் அவர். இருப்பினும், செந்தில்குமார் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார். இது வரிச்சூர் செல்வதை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. அதையடுத்து செந்தில்குமாரைக் கொல்ல முடிவுசெய்த வரிச்சூர் செல்வம், தன்னுடைய ஆட்கள் ஆறு பேரை அனுப்பி செந்தில்குமாரை விருதுநகரிலிருந்து கடத்தி, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்கு அவர்களுக்குள் எழுந்த பிரச்னையில், செந்தில்குமாரை வரிச்சூர் செல்வம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கொலையை மறைப்பதற்காக, செந்தில்குமாரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி பாலித்தீன் கவர்களில் கட்டி திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றில் வீசியெறிந்ததாக வரிச்சூர் செல்வம் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைப் பதிவுசெய்த போலீஸார் வரிச்சூர் செல்வத்தை கைதுசெய்து, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைக்குப் பிறகு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, மருத்துவப் பரிசோதனை முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், செந்தில்குமார் மாயமான வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டு, வரிச்சூர் செல்வம் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜபிரபு முன்பு இரவில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வரிச்சூர் செல்வத்தை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். வழக்கில் தலைமறைவாகியிருக்கும் மற்ற 6 பேரைத் தேடி வருகிறோம்" என்றனர்.
from Latest news

0 கருத்துகள்