Doctor Vikatan: இதயத்தை பலப்படுத்தவென உடற்பயிற்சிகள் ஏதேனும் இருக்கின்றனவா? 50 ப்ளஸ் வயதில் உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்குவது சரியானதா? எப்படிப்பட்ட பயிற்சிகளை, எத்தனை மணி நேரம் செய்யலாம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயத்துக்கான பயிற்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், நடனம் போன்றவை அடங்கும். இவற்றை வாரத்தில் 5 நாள்களுக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்காவது செய்ய வேண்டும். தினமும் 30 முதல் 40 நிமிடங்களுக்கு வேகமான நடைப்பயிற்சி, மெதுவான ஜாகிங் போன்றவற்றைச் செய்யலாம்.
இவை மட்டுமே போதுமா என்ற கேள்வி சிலருக்கு வரலாம். 50 ப்ளஸ் வயதில் இருக்கும் பலரும் அதுவரை செய்யாத விஷயமாக இருப்பது ஸ்ட்ரென்த் டிரெயினிங். இன்று இளம் வயதிலேயே பலரும் ஜிம் சென்று வெயிட் தூக்குகிறார்கள், ஸ்ட்ரென்த் டிரெயினிங் உள்ளிட்ட பல பயிற்சிகளைச் செய்கிறார்கள். இந்தப் பயிற்சிகளை எல்லாம் வயதாக, ஆக செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம்.
வயதாக, ஆக தசைகளின் அடர்த்தியும் எலும்புகளின் அடர்த்தியும் குறையத் தொடங்கும். ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளின் மூலம் இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடிவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இந்தப் பயிற்சிகளை இரண்டு நாள்களுக்கொரு முறையாவது செய்வது பலனளிக்கும். நம்முடைய உடல் பேலன்ஸ், நெகிழ்வுத்தன்மை, உடலமைப்பு போன்றவையும் மிக முக்கியம். தினசரி சில நிமிடங்கள் செய்யும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் இவற்றுக்கும் உதவும்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை ஏரோபிக்ஸ் அல்லது ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளுக்கு முன்போ, பிறகோ செய்யலாம். இவையெல்லாம் இதயம் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கான அட்வைஸ். இதயநலனில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பவர்கள், மருத்துவ ஆலோசனையோடு அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். வயதானவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
வயதானவர்களுக்கு அறிகுறிகளை வெளியே காட்டாத இதய பாதிப்புகள் ஏதேனும் இருக்கலாம். அது தெரியாமல் திடீரென உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்குவது ஆபத்தில் முடியலாம்.
எனவே முதலில் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு பிறகு உடற்பயிற்சி செய்வது குறித்து முடிவெடுங்கள். திடீரென உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது மிதமாகச் செய்ய ஆரம்பியுங்கள்.
முதல்நாளே அதில் வேகத்தைக் காட்ட வேண்டாம். மெள்ள மெள்ள உங்கள் இலக்கை அடையும் முயற்சியை நோக்கிச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உடல் சொல்வதை கவனியுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news

0 கருத்துகள்