உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது.
2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). ஒருகாலத்தில் கொத்தனார் வேலை பார்த்தவர். இப்போதெல்லாம் அது முடிவதில்லை. எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு ஒரு சின்ன `வாக்’ போனார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார்.
கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் பார்த்தார். கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு அதனருகே போனார். அருகில் போனதும்தான் அது ஒரு குட்டி பென்குயின் என்பது தெரிந்தது. தன் நடுங்கும் கரங்களால் பென்குயினை மெல்லத் தூக்கினார். உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்தார். லேசாக உயிர்த்துடிப்பு தெரிந்தது. பென்குயின் பறவையின் உடல் முழுக்க நனைந்திருந்தது... கடல்நீரால் அல்ல. அதன் உடல் முழுக்க எண்ணெய் அப்பிக்கிடந்தது.
இந்த மனுஷப் பயலுகள் கடலில் இன்னதுதான் என்று இல்லை... கண்டதையும் கொட்டுகிறார்கள். குப்பை, கழிவுகள், பிளாஸ்டிக்குகள்... போதாததற்கு எண்ணெய்க் கிணறுகள் வேறு... இந்தக் குட்டி பென்குயின் எந்த எண்ணெயில் புரண்டு, எப்படிக் கரையேறியதோ?’ கவலையோடு டி சோஸா பென்குயினைத் தன் கைகளில் பொத்தினாற்போல் எடுத்துக்கொண்டார்.
`காது கேளாதவர்களால் கேட்க முடிகிற, பார்வையற்றவர்களால் பார்க்க முடிகிற மொழியின் பெயர், கருணை.’ - ஆப்பிரிக்க நாடோடிப் பொன்மொழி.
வீட்டுக்கு பென்குயினைக் கொண்டு வந்தார் டி சோஸா. தன்னால் முடிந்த சிகிச்சைகளையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். முதலில் அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த எண்ணெய்ப்பிசுக்கெல்லாம் போகும்வரை அதற்கு வலிக்காமல் மெதுவாகத் துடைத்தெடுத்தார். அது சாப்பிடுவதற்கு ஃபிரெஷ்ஷான சின்னச் சின்ன மீன்களைக் கொடுத்தார். அது அவரிடம் பயந்து போகாமல் இருக்க, அதைத் தூக்கிக் கொஞ்சினார். தனக்குத் தெரிந்த அன்பு வார்த்தைகளையெல்லாம் கொட்டினார். அதனோடு ஓர் அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார். இரண்டொரு நாள்களில் பென்குயின் முழுக்க குணமடைந்தது.
ஒரு மாலைப்பொழுதில், பென்குயினைக் கைகளில் தூக்கிக்கொண்டார். அதைச் செல்லம் கொஞ்சியபடி நடந்தார். கடற்கரைக்கு வந்ததும், அலைகள் வந்து காலைத் தொடும் தூரத்தில் பென்குயினை இறக்கிவிட்டார். ``போ செல்லம்... இப்போதான் நீ நல்லா ஆகிட்டே இல்லை... கெளம்பு...’’ என்று அதற்கு விடைகொடுத்தார். அப்போது நடந்தது அதிசயம். பென்குயின் கடலைப் பார்த்தபடி சில விநாடிகள் நின்றுகொண்டிருந்தது. தான் அங்கிருந்தால், அது போகாது என்று நினைத்த டி சோஸா திரும்பி நடந்தார். சற்று தூரம் போனதும் திரும்பிப் பார்த்தார். பென்குயின் தன் கால்களை மெல்ல எடுத்துவைத்து அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது.
``ஏய்... நீ இன்னுமா போகலை? என்ன... உன் வீட்டுக்குப் போக உனக்குப் பிடிக்கலையா?’’ என்று கேட்டுவிட்டு அருகிலிருக்கும் தன் வீட்டை நோக்கி நடக்க, பென்குயினும் பின்னாலேயே வந்தது. வீட்டின் பின்புறத்துக்குச் சென்றது. அங்கு வைத்துதான் டி சோஸா அதற்கு சிகிச்சை கொடுத்திருந்தார். என்னவோ சொந்த வீடுபோல பென்குயின் அந்த இடத்தில் படுத்துக்கொண்டது. அன்று அவர் பின்னாலேயே வந்த அந்த பென்குயின் பதினோரு மாதங்கள் அவருடனேயே இருந்தது.
`கருணையைவிட சிறந்த ஞானம் வேறு இருக்க முடியுமா?’’ - தத்துவவியலாளர் ரூசோ.
பென்குயின், டி சோஸாவுடன் இருந்த நாள்களில் அவருடைய பேரனுக்கும் அதனுடன் நெருக்கம் ஏற்பட்டது. போர்ச்சுகீசிய மொழியில் பென்குயினை `பின்குயிம்’ (Pinguim) என்பார்கள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்கு அந்த வார்த்தையைச் சொல்ல வரவில்லை. நாக்குக் குழற, மழலைக் குரலில் `டிண்டிம்’ (Dindim) என்று சொன்னான். அதுவே அதன் பெயராகிப்போனது. ஒருநாள் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போன டிண்டிம் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்... அது வருவதாகத் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் டி சோஸாவின் நண்பர்களும் சொன்னார்கள்... ``என்ன கடலையே வெறிச்சு வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே? உன்னோட டிண்டிம் திரும்பி வரும்னு பார்க்குறியா? அது இனிமே வரவே போறதில்லை.’’
அப்படிப் பேசியவர்களை வாயடைக்கவைத்தது டிண்டிம். அடுத்த ஆண்டு ஜூன் மாதம். காலையில் கண்விழித்து எழுந்து கதவைத் திறந்துகொண்டு, பின்புறத்தில் கூண்டிலிருக்கும் பறவைகளுக்குத் தீனி வைக்கப்போனார் டி சோஸா. அங்கே ஜம்மென்று படுத்துக்கொண்டிருந்தது டிண்டிம். அந்த முதியவர் ஆச்சர்யம் தாங்க முடியாமல், ஓடிப்போய் அந்த பென்குயினை வாரி அணைத்துக்கொண்டார். அந்த வருடம் முடிந்து அடுத்த பிப்ரவரி மாதம்தான் கிளம்பிப்போனது டிண்டிம்.
அந்த பென்குயின் பறவை வருடம்தோறும் அவரைத் தேடி வந்துகொண்டேயிருந்தது. இந்தச் சம்பவத்தை பிரபல உயிரியலாளர், ஜோவோ பாவ்லோ கிராஜெவ்ஸ்கி (Joao Paulo Krajewski) இப்படிச் சொன்னார்... ``இது போன்ற ஒரு நிகழ்வை நான் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை. டி சோஸாவைத் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே அந்த பென்குயின் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.’’
`Magellanic penguin’ என்று சொல்லப்படும் இந்த தென்னமெரிக்க பென்குயின்கள் வருடா வருடம் வெகு தூரத்துக்கு இடம்பெயர்ந்து செல்பவை. `பேட்டகோனியா’ (Patagonia) என்று சொல்லப்படும் தென்னமெரிக்காவின் அர்ஜென்டினா, தெற்கு சிலி, ஃபாக்லேண்ட் தீவுகள் என பல இடங்களுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்பவை. அப்படிப் பார்க்கப்போனால், டிண்டிம் குறைந்தது 8,000 கிலோமீட்டர் தொலைவாவது பயணம் செய்து டி சோஸாவைப் பார்க்க வந்திருக்க வேண்டும்.
``எனக்கு அந்த பென்குயின் சொந்தக் குழந்தை மாதிரி. அதுவும் என்னை மனதார விரும்பும் என்றுதான் நினைக்கிறேன்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் டி சோஸா. டிண்டிமுக்கும் டி சோஸாவுக்குமான உறவு, ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதப்பட்டிருக்கிறது. டாகுமென்டரியாக வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் இரண்டு.
ஒன்று, அன்பை அடைக்கும் தாழ் என்று ஒன்று இல்லை. அது அதிசயங்களை, அற்புதங்களை, எத்தனையோ ஆச்சர்யங்களை நிகழ்த்திக் காட்டும். இரண்டு, டிண்டிமைக் காப்பாற்ற ஒரு டி சோஸா என்ற முதியவர் இருந்தார். இன்றைய மனிதகுலம் கடலில் கழிவுகளைக் கொட்டி அட்டூழியம் செய்து, எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்?
from Latest news

0 கருத்துகள்