Header Ads Widget

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் பகுதியில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 200 நாள்களைக் கடந்த பின்பும், இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே தான், அறிவியல் ரீதியான தடையங்களை சேகரிப்பதாகக் கூறி சி.பி.சி.ஐ.டி போலீஸார் இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த 21பேரிடம் இதுவரை டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கையவலைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீஸார் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவர்களுக்கு சோதனை என்பதால், அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அவசியம். அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி ஆஜரான வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர் ஒருவர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் எங்களையே குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள், உரிய முறையில் எங்கள் பிள்ளையை கையாளவில்லை. எனவே, பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பெற்றோருடன், சிறுவர்களும் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதி 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து, 14-ம் தேதி சிறுவர்கள், பெற்றோர்களிடம் மாறி, மாறி வாக்குமூலம் பெற்ற நிலையில், இறுதியாக, டி.என்.ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேங்கையவல் கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர், `உரிய விதிமுறைகளை பின்பற்றி, எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் டெஸ்ட் எடுத்தால், நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்' என்றார்கள். இதன் மூலம், டி.என்.ஏ பரிசோதனைக்கு 4 சிறுவர்களின் பெற்றோர்களும் சம்மந்தம் தெரிவித்தனர். இதற்கிடையே, 17-ம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார் நீதிபதி.

இந்த நிலையில் தான், வழக்கு இறுதி விசாரணையில், நீதிபதி ஜெயந்தி, 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனாலும், எப்போது என்று தேதி குறிப்பிடாத நீதிபதி, `இது சம்மந்தமாக மாவட்ட குழந்தைகள் நல ஆணைய தலைவர், குழந்தைகள் நல குழு தலைவர் உள்ளிட்டோர் சிறுவர்களின் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து, ஒரே நேரத்தில் 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/VBlX3Wr
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்