Header Ads Widget

``நானும் உம்மன் சாண்டியும் ஒரே நாளில் எம்.எல்.ஏ ஆனோம்; ஆனால்..." - உருகிய பினராயி விஜயன்

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, நேற்று அதிகாலை பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. திதுவனந்தபுரத்தில் உள்ள அவரின் 'புதுப்பள்ளி' வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சாலை மார்க்கமாக கோட்டயத்தில் உள்ள அவரது பூர்வீக வீடுக்கு பூத உடல் கொண்டுசெல்லப்படுகிறது.

இதன் காரணமாக, எம்.சி சாலையில் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லக்கூடாது என போலீஸார் அறிவித்துள்ளனர். கோட்டயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உம்மன்சாண்டி உடல் வைக்கப்படுகிறது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உம்மன் சாண்டி மறைவுக்கு கேரள ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஒப்பற்ற மக்கள் தலைவராக இருந்தார். புதுப்பள்ளி என்ற ஒரே தொகுதியில் 53 வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற சாதனை படைத்தவர். அதுதான் உம்மன் சாண்டிக்கு மக்கள் அர்ப்பணம் செய்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் உள்ள ஆதாரமாக விளங்குகிறது. இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அவர், அனைத்து மக்களுக்குமான பிரச்னைகளுக்கு கருணையுடன் பதில் அளித்து அரசை நடத்தினார்.

மக்கள் எப்போது விரும்பினாலும் முதலமைச்சரை காண முடியும் என்ற நிலை இருந்தது. கருணையும் இரக்கமும் கலந்தது உம்மன் சாண்டியின் தலைமை பண்பு. தலைசிறந்த மக்கள் சேவை செய்தவர் உம்மன் சாண்டி. சமூகப் பிரச்னைகளில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த சிறந்த ஆளுமை கொண்டவர். உம்மன் சாண்டியின் மறைவால் வருந்தும் அவரின் குடும்பத்தினர் மற்றும் அவரை நேசிப்பவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்" என குறிப்பிட்டார்.

உம்மன் சாண்டி குடும்பத்தினருக்கு முதல்வர் பினராயி விஜயன் ஆறுதல் தெரிவித்தார்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் கேரள அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். உம்மன் சாண்டி விட்டுச்சென்ற அம்சங்கள் பலவும் கேரள அரசியலில் காலங்களை கடந்து வாழும். ஒரே தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை கடந்துள்ளார். போட்டியிட்ட எந்த தேர்தலிலும் அவர் தோற்கவில்லை. இது உலக பாராளுமன்ற வரலாற்றில் சிலரால் மட்டுமே சாதிக்க முடியும்.

ரகுல் காந்தி ஆறுதல்

அசாதாரணமானவர்களின் வரிசையில் உம்மன் சாண்டி இடம்பிடித்துள்ளார். அதுவே அவர் மக்கள் இதயங்களில் பெற்ற செல்வாக்குக்கு சான்றாகும். 1970-ல் நானும் உம்மன் சாண்டியும் ஒரே நாளில் சட்டசபையில் உறுப்பினராக ஆனோம். நான் இடை இடையே சட்டசபைக்கு வந்தேன். இடையில் பல வருடங்கள் சட்டசபைக்கு வெளியே அரசியல் பணியாற்றினேன். ஆனால், உம்மன் சாண்டி முதலில் சத்தியபிரமாணம் செய்ததில் இருந்து எம்.எல்.ஏ-வாகவே தொடர்கிறார்.

கே.கருணாகரன், ஏ.கே.ஆன்றணி உள்ளிட்ட பல தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், வேறு பதவிக்கும் சென்றனர். உம்மன் சாண்டிக்கு சட்டசபை மட்டுமே எப்போதும் பிடித்தமானதாக இருந்தது. அவர் சட்டசபையை விட்டு வேறு பதவிக்கு போனதே இல்லை. கேரள மக்களுடன் அவருக்கு இருந்த ஆத்மார்த்தமான உறவுக்கு வேறு உதாரணம் தேவையில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

1970-களின் தொடக்கத்தில் அதிகமான இளைஞர்களின் கேரள சட்டசபையில் கவனம் ஈர்த்தார்கள். அவர்களில் வேறு யாருக்கும் கிடைக்காத பொறுப்புக்கள் உம்மன் சாண்டிக்கு கிடைத்தன. மூன்றுமுறை அமைச்சர் ஆனார். நான்காவது முறை முதலமைச்சர் ஆனார். நிதித்துறை, உள்துறை, தொழில்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார். வாழ்க்கையை அரசியலுக்கு என சமர்ப்பித்தவர் அவர்.

1970 முதல் கேரள அரசியல் நீரோட்டத்தில் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் வரலாற்றில் அரை நூற்றாண்டு செயல்பாட்டில் உம்மன் சாண்டியின் பங்கு அளப்பரியது. கடின உழைப்பு, விடா முயற்சியுமே உம்மன் சாண்டியை வழிநடத்தியது. உணவு, தூக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தனது உடல் நலத்தைக்கூட கவனிக்காமல் காங்கிரஸ் அரசியலில் ஈடுபடும் இயல்பு அவருக்கு இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்திலும் எடுத்த கடமையை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருந்தார். பொதுவாழ்வில் உம்மன் சாண்டியின் ஆத்மார்த்தமான செயல்பாடு புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகும். உம்மன் சாண்டியின் மறைவு ஈடுசெய்யமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது" எனக் குறிப்பிட்டு உள்ளார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்