மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட கட்டடத் தொழிலாளி, வீடு திரும்பியதும் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வேடன். கட்டடத் தொழிலாளியான இவர், நள்ளிரவு 1 மணிக்கு இரவுக்காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு எம்.கல்லுப்பட்டியிலிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அபோது நடந்து சென்றுகொண்டிருந்த வேடனை, ரோந்து சென்ற எம்.கல்லுப்பட்டி போலிசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சந்தேக வழக்கு பதிவு செய்துவிட்டு 3 மணியளவில் வீட்டிற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
வீட்டிற்கு சென்று தூங்கிய வேடன், நேற்று காலையில் இறந்து கிடந்ததைக் பார்த்து உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி போலிஸார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸார் அழைத்து சென்று தாக்கியதால்தான் உயிரிழந்தார் என வேடனின் உறவினர்கள் குற்றம்சாட்டி, அரசு மருத்துவமனையில் இருந்த போலிசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸில் புகாரும் கொடுத்தனர்
அங்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வேடனின் உடல் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ``அதிகாலை 1 மணிக்கு மல்லப்புரம் விலக்கு சாலையில் சந்தேகம் ஏற்படும் வகையில் வேடன் நடந்து சென்று கொண்டிருந்ததால் அவரை விசாரிப்பதற்காக எம்.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அரை மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த வேடன் மரணமடைந்துள்ளார். தன் கணவர் சாவுக்கு எம்.கல்லுப்பட்டி போலீஸ்தான் காரணம் என்று கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தப்புகார் டி.எஸ்.பி-யால் விசாரிக்கப்படும்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்த உடற்கூராய்வில் வேடன் இருதய நோயால் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரிந்துள்ளது. எம்.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேசன் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் அங்கு வேடனை போலீஸ் தாக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
from Latest news

0 கருத்துகள்