Header Ads Widget

எடப்பாடிக்கு டெல்டாவில் டஃப் கொடுக்குமா ஓ.பி.எஸ் - தினகரன் அணி?!

அண்மையில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, ``ஓ.பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்ததே, இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தே பயணிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் - ஓபிஎஸ்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக் கனைவை, அமமுக வேட்பாளர்கள் வாக்கை பிரித்து அழித்தனர். குறிப்பாக டெல்டா மாவட்டம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், அ.ம.மு.க கணிசமான வாக்குகளை பெற்றியிருந்தது. தற்போது அ.ம.மு.க-வுடன் பன்னீரும் கைக்கோர்த்து இருப்பது, டெல்டா மாவட்டங்களில் அமமுக பலமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் டெல்டா மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ``டெல்டாவில் மயிலாடுதுறை, நாகை, மன்னார்குடி, திருவாரூர், பாபநாசம், திருவையாறு, கந்தர்வகோட்டை, திருமயம் உள்ளிட்ட தொகுதியில் அ.தி.மு.க-வின் வெற்றியை அ.ம.மு.க பறித்தது. மேலும், தமிழ்நாடு முழுக்க சுமார் 18 தொகுதியில் அ.தி.மு.க தோல்வியடைய, அ.ம.மு.க பெற்ற வாக்குகள்தான் காரணம். 171 தொகுதியில் எங்களுக்கு எதிராக வேட்பாளர்களைப் போட்டு, 12.89 லட்சம் வாக்குகளைப் பெற்றார் டி.டி.வி. இது கிட்டத்தட்ட 3 சதவிகிதம் வந்துவிட்டது.

டிடிவி தினகரன்

2021-ம் ஆண்டு தேர்தல் முடிவு வெளியாகி, எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே, 'நமது தோல்விக்கு அ.ம.மு.க முக்கிய காரணம். அதை யாராலும் மறுக்கமுடியாது' என சீனியர்கள் கருத்து தெரிவித்தனர். இதை கொங்கு பகுதி நிர்வாகிகளை தவிர, பிற அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டோம். 2021-ல் அ.ம.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் வரும் தேர்தலில் அப்படியே நீடித்தாலும், அ.தி.மு.க-வுக்கு ரொம்பவே டேஞ்சர்தான். இதனால்தான், அ.ம.மு.க நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவர, 'ஆப்ரேஷன் அ.ம.மு.க'-வை எடப்பாடி செயல்படுத்தினார்.

இதன்மூலம் அ.ம.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் கோமல் ஆர்.கே.அன்பரசன், தலைமை நிலையச் செயலாளர் கே.கே.உமாதேவன், மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் கே.கே.சிவசாமி, அ.ம.மு.க-வின் பொருளாளர் திருச்சி மனோகரன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் ஆர்.கே.செல்வகுமார் உள்ளிட்டோரை இழுத்தனர். தொடர்ந்து, மயிலாடுதுறை, பெரம்பலூர் அ.ம.மு.க கிட்டதட்ட காலியானது. இதேபோல, டெல்டாவின் இதர நிர்வாகிகளை இழுக்கும் பணி நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க-வுக்கு வந்தபோதும் டி.டி.வி ரொம்ப டேஞ்சர்தான். டிடிவிக்கு தனது சமூக வாக்குதான் பிரதானம். அவருடன் தற்போது ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து இருப்பது, சமூக ரீதியாக அ.தி.மு.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஓ.பி.எஸ்-ஸும் டிடிவியும் நிச்சயம் இணைவார்கள் என்பதால்தான், மதுரையில் கூட்டம்போட எடப்பாடி கடந்த ஆண்டே முடிவு செய்தார். மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் மாநாட்டை பொறுத்துதான், ஓ.பி.ஸ்., டி.டி.வி-யின் தாக்கம் இருக்கும். இருப்பினும், மதுரை மாநாடு போல, டெல்டாவில் நிச்சயம் மாநாடு நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல, பா.ஜ.க-வின் சித்து விளையாட்டுகள் தேர்தல் நேரத்தில் நடந்தேறவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவேதான், ஓ.பி.எஸ்., டி.டி.வி-யின் அடுத்தக்கட்ட நகர்வுகளை கவனமாக கவனித்து வருகிறோம்" என்றனர் விரிவாக...



from India News https://ift.tt/bvgVuQx
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்