Header Ads Widget

அமித் ஷா பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்; எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்; ஆறுதல் கூறிய அண்ணாமலை!

ராமேஸ்வரத்துக்கு அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதில், ராமேஸ்வரம் அருகே ஏறகாடு கிராமத்தில் பா.ஜ.க நகர் பொதுச்செயலாளர் முருகன் என்பவர் வீட்டுக்கு அமித் ஷாவை அழைத்துச் செல்வதற்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். அமித் ஷாவின் பயண திட்டத்திலும் பா.ஜ.க தொண்டர் வீட்டுக்குச் செல்வது இடம்பெற்றிருந்தது. அதனால், அந்த கிராமத்தில் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன. அவரது வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு கருதி காஸ் சிலிண்டர் உட்பட சில பொருள்களை அப்புறப்படுத்தியிருந்தனர்.

அமித் ஷா பயணத்திட்டத்தில் இடம்பெற்ற தொண்டர் வீடு

மேலும் வெளி நபர்கள் யாரும் அந்த கிராமத்திற்குள் வரக் கூடாது என உத்தரவிட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித் ஷா வரும்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கிராமத்தினருக்கு கட்டுப்பாடு விதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அமித்ஷா வருகையையொட்டி அவருக்கு கொடுப்பதற்காக பா.ஜ.க நிர்வாகி முருகன் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தார். ராமநாதபுரம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளைப் பரிசோதித்தனர். அமித் ஷா வருகைக்காக முருகன் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்துசெய்யப்பட்டு, அவரது சார்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதாகத் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

தொண்டர் முருகன் வீட்டில் அவரிடம் உரையாடும் அண்ணாமலை

பின்னர் வீட்டுக்கு வந்த அண்ணாமலையைக் காலில் விழுந்து பா.ஜ.க நிர்வாகி முருகன் வரவேற்றார். பதிலுக்கு அண்ணாமலையும் முருகன் காலில் விழுந்தார். அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அமித் ஷா பயணத்திட்டத்தின் திடீர் மாற்றத்தால் இங்கு வர முடியவில்லை. கவலைப்பட வேண்டாம். அவரது சார்பில்தான் நான் வந்திருக்கிறேன், உங்களது கோரிக்கையை என்னிடம் கூறுங்கள் என தெரிவித்தார். அப்போது தனக்கு வீடு கட்டி கொடுக்குமாறு அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தார். உங்களுக்குப் பிடித்த இடத்தில் மூன்று சென்ட் நிலத்தைக் காட்டுங்கள், அங்கு உங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கிறேன் என உத்தரவாதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தேநீர் அருந்திய அண்ணாமலை, அவரது குடும்பத்தாரிடம் சிறிது நேரம் உரையாடிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



from India News https://ift.tt/hR3oLaN
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்