விழுப்புரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ளது புதுக்குப்பம் எனும் மீனவ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 6 பெண்கள், புதுவை சென்று மீன் வாங்கி வருவதற்காக கீழ்புத்துப்பட்டு அருகே ஈ.சி.ஆர் சாலையோரம் நேற்று அதிகாலை 5 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, சென்னையிலிருந்து புதுவை நோக்கி ஈ.சி.ஆர் சாலையில் ஷிப்ட் கார் ஒன்று வந்துள்ளது. இதனை சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் இயக்கியதாக தெரிகிறது.
அந்த கார் சம்பவ இடத்தை அடைந்தபோது, தூக்க கலக்கத்தில் மீன் வாங்க காத்திருந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும்; அங்கு திடீரென குறுக்கிட்ட இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை உடனடியாக திரும்பியபோது மீனவ பெண்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இந்தக் கோர விபத்தில் லட்சுமி, கோவிந்தம்மாள் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கெங்கைம்மாள் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேலும், நாயகம், கோமலம், பிரேமா என்ற மூன்று பெண்களும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்... உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், பலத்த காயமடைந்த நாயகம் என்ற பெண்ணிற்கு ஒரு லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சையிலுள்ள மற்ற இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, தீவிர சிகிச்சை பெற்று வந்த நாயகம் என்ற பெண் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news

0 கருத்துகள்