தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``மதச்சார்பற்ற இந்தியாவில் மக்களை மதத்தின்பேரால் பிளவுபடுத்தி, திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி, மசூதிகள், தேவாலயங்களை இடித்து, எரித்து அதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்கும் அயோக்கியத்தனங்களைத் தொடர்ந்து கூச்சமின்றி செய்துவருபவர்கள் பா.ஜ.க-வினர். வாஜ்பாய் யாத்திரை நடத்தியபோது இந்தியா பற்றி எரிந்து, பிளவுபட்டது. அத்வானி நடத்தியபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஒரு தேர்தல் வந்தால் அதையொட்டி கலவரம் நடத்துவதுதான் பா.ஜ.க-வின் ஸ்டைல். அதேபோல, தமிழ்நாட்டிலும் இந்த யாத்திரையின் மூலம் சாதி, மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். ஆனால், தளபதி மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் அவர்கள் எண்ணம் கனவிலும் நடக்காது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கி, நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, சிறுபான்மையினர், பழங்குடி மக்களுக்குத் தீங்கிழைத்துவருபவர்கள் பா.ஜ.க-வினர். எனவே, அவர்கள் செய்துவரும் துரோகங்களுக்கான பாவயாத்திரையாகத்தான் அரைவேக்காடு அண்ணாமலையின் யாத்திரையை மக்கள் பார்க்கிறார்கள். இது போதாது. மோடியும் அமித் ஷாவும் காசி, பத்ரிநாத் என்று பாவயாத்திரைகளைத் தொடர்வதுடன், மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’
ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க
``பா.ஜ.க-வின் யாத்திரை, தி.மு.க-வினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வின் ஊழல்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து தோலுரித்துவருகிறார் அண்ணாமலை. அதனால்தான், தமிழக முதல்வர், தான் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்ச்சியாக பா.ஜ.க-வைக் குறைசொல்லிவருகிறார். பா.ஜ.க உறுப்பினர்கள்மீது பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களைக் கைதுசெய்துவருகிறார். கைதுகளால் எங்களை அடக்க நினைத்தால், நூறு மடங்கு வேகத்துடன் நாங்கள் முன்னேறிச் செல்வோம். யாத்திரை செல்லும் இடங்களிலெல்லாம் மக்களின் ஆரவார வரவேற்பைப் பார்த்து இந்த அரசு ஆடிப்போயிருக்கிறது. அதைத் தடுக்க ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் நாள்கள் செல்லச் செல்ல இவர்களே கலவரம் செய்து பா.ஜ.க-வின் மீது பழி போடக்கூட தயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சியில் அதிக கலவரங்கள் நடந்தன என்று மக்களுக்குத் தெரியும். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மக்களுக்கானது. ஆனால், முதல்வரோ `என் மகன், என் பேரன்’ என்று ஆட்சியைத் தனது குடும்பத்தின் நலனுக்காக மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள். அதற்கு அண்ணாமலையின் யாத்திரை முக்கியக் காரணமாக இருக்கும்.’’
from India News https://ift.tt/kImw7Bx
via IFTTT
0 கருத்துகள்