Header Ads Widget

புதுக்கோட்டை: வழக்கறிஞர்கள் போராட்டம்; பணியிடை மாற்றம்; பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?!

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாஸ்மின் வித்யா - ஆரோக்கியராஜ் என்ற தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்திருக்கிறது. ஆரோக்கியராஜ் மீது அவரின் மனைவி வரதட்சணை தொடர்பான புகாரை சமூக நலத்துறை அலுவலகத்தில் கொடுத்திருந்தார். இதுதொடர்பான வழக்கிற்காக பெண்ணின் தரப்பில் வழக்கறிஞர் கலீல் ரகுமான் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, ஆரோக்கியராஜ், கலீலை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இதுதொடர்பாக, திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் கலீல் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லை, ஆரோக்கியராஜை கைது செய்யவில்லை என்று கூறி கோர்ட் முன்பு சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, கலைந்து சென்றனர். ஆனால், போலீஸார் கூறியபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணை அதிகாரியான திருக்கோகர்ணம் காவல் நிலைய பெண் எஸ்.ஐ சங்கீதா நடவக்டிக்கை எடுக்காமல், கலீல் ரகுமானை தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று எஸ்.பி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்மந்தப்பட்ட எஸ்.ஐ சங்கீதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக உறுதியளித்தோடு, எஸ்.ஐ சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு எஸ்.ஐ சங்கீதா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல் நிலையத்திற்கு வந்தவர் லீவு கேட்டதாகவும், அவருக்கு லீவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே லீவு லெட்டரை ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்று படுத்தவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, மயக்க நிலையில் இருந்த எஸ்.ஐ சங்கீதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் வீட்டில் இருந்தவர்கள். எஸ்.ஐ சங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்திருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ வந்தபோது, என்னுடைய முடிவுக்கு வழக்கறிஞர்கள் போராட்டம் தான் காரணம். தவறு செய்யாத எனக்கு பணியிடை மாற்றம் கிடைத்திருக்கிறது. இனியாவது போலீஸாருக்கு நல்லது நடக்கட்டும்" என்று ஒரு குறிப்பினை அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்யாத தவறுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், வக்கீல்கள் போராட்டத்தின் போது, தகாத வார்த்தைகளில் பேசியதால் தான் மனமுடைந்து எஸ்.ஐ மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்