சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தோட்டக்கலை சங்கத்தின் கீழ் இருந்த 25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், தமிழக அரசால் மீட்டெடுக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைத்து சென்னை மாநகரை அழகுப்படுத்த உள்ளது தமிழக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 25 கோடியில் சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா வடிவமைப்பு குறித்து தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிருந்தா தேவியிடம் பேசியபோது``பூங்காவை வடிவமைப்பதற்கான திட்டங்களை பல நிபுணர்களிடம் அரசு கேட்டுள்ளது. நிபுணர்கள் வடிவமைப்பு திட்டத்தை அரசிடம் ஒப்படைத்ததும் பூங்காவிற்கான பணிகளை தொடங்குவோம்" என்றார்.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் எதையெல்லாம் இடம் பெற செய்யலாம், எப்படி வடிவமைக்கலாம் என்று சூழல் ஆர்வலர்களிடம் பேசினோம்....
இயற்கை ஆர்வலர் வானவனிடம் பேசியபோது, ``பூங்காவைச் சுற்றி உயிர்வேலியாக மூங்கில், பனை மரங்கள் நடுவது அனைத்து வகை உயிர்களுக்கும் இருப்பிடமாக அமையும். மரபு மரங்களையும் மருத்துவ குணமுள்ள மரங்களையும் பூங்காவில் நடவேண்டும்.
மரங்களின் பலன்களை ஆவணப்படுத்தி ஒரு ஆவணக் காப்பகம் இருந்தால் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூங்காவில் தரையில் நிழலே படாத வகையில் வனம் போல பூங்கா இருந்தால் சிறப்பாக அமையும். மரங்கள் நிறைந்த இடத்தில் இருக்கையில் குழந்தைகள் வழக்கத்தைவிட உற்சாகமாய் இருப்பதைக் காண முடியும்.
மழைக்காலங்களில் சென்னையில் சராசரி மழைப்பொழிவை விட அதிகமாகவே மழை பெய்கிறது. கலைஞர் நூற்றாண்டு பூங்காவை மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கட்டமைக்க வேண்டும். சேமிக்கப்பட்ட மழை நீரை ஆண்டு முழுவதும் குடிநீராக பயன்படுத்தலாம். இதன் மூலம் பூங்காவிற்கு வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய தேவை இருக்காது.
குழந்தைகளுக்கு தேவையான பசுமை நூலகமும், மரங்களுக்கு கீழ் அமரும்படியான திறந்தவெளி கலையரங்கங்களும் அமைக்கலாம். இயற்கை சூழ்ந்த இடங்களில் இருப்பது ஆக்ஸிஜன் நிறைந்த சூழலில் குழந்தைகள் அமரும் போது மகிழ்ச்சியாக உணர்வர். பூங்காவில் நடப்பட்ட மரங்களிலிருந்து கிடைக்கும் இலை தழைகளை பூங்காவுக்குள் மக்கவைப்பதால் கிடைக்கும் எருவை மீண்டும் மரங்களுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் பூங்காவை சுயசார்புடன் உருவாக்கமுடியும்.
குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்படும் பகுதியில் உடற்பயிற்சியுடன் மூளைக்கான பயிற்சியாகவும் இருந்தால் சிறப்பு. சென்னையில் மரபு விதைகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.
எனவே பூங்காவில் ஆண்டிற்கு இருமுறை மரபு விதை திருவிழா நடத்தி மரபு விதைகளை மக்களுக்கு கிடைக்க செய்யலாம். இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தால் கலைஞர் நூற்றாண்டு பூங்கா சிறப்பாக விளங்கும்" என்றார்.
பேராசிரியரும் இயற்கை வேளாண்மை விஞ்ஞானியுமான சுல்தான் அகமது இஸ்மாயில் சில பரிந்துரைகளை முன்வைத்தார்.
"சென்னையில் உள்ள பெரும்பான்மையான பூங்காக்களில் மரங்களின் எண்ணிக்கை ஓரளவு இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் மூலிகை தன்மை கொண்ட மரங்கள், நாட்டு மரங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு உணர்த்துவது போல் வடிவமைக்க வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் பசுமை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். விதைப்பந்து செய்தல், மாடித்தோட்டம் போன்ற பயிற்சி வகுப்புகள் பெரியோருக்கும் சிறியோருக்கும் நடத்தப்பட வேண்டும்.
நான் ஒடிஷாவில் தேசிய பாடத்திட்ட இயக்ககத்தோடு (NCERT) பணியாற்றும் போது மாணவர்களை வீட்டிலிருந்து காய்கறி பழங்களை எடுத்து வர வைத்து அந்த காய்கறி மற்றும் பழங்கள் மூலம் ஜாம் போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முறையை கற்றுக்கொடுத்தார். இது போல் பயிற்சிகளும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இருந்தால் சிறப்பாக அமையும்" என்றார்.
from Latest news

0 கருத்துகள்