Header Ads Widget

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஸ்டாலின் சொல்வது போல் அதிபர் ஆட்சியைக் கொண்டுவரும் முயற்சியா?!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க பல ஆண்டுகளாகப் பேசிவந்த நிலையில், இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய பா.ஜ.க அரசு அமைத்திருக்கிறது.

மோடி

திடீரென்று இம்மாதம் கூட்டப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்கூடத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவைக் கொண்டுவருவதற்கான வேலைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது என்று கூட பேசப்படுகிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய விவாதம் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் நிலையில் தி.மு.க நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ‘அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம்’ என்று விமர்சித்திருக்கிறார் ஸ்டாலின். 

ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ‘யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் பிரதமராக வர வேண்டும் என்பதல்ல... யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். இந்தியா என்று சொன்னாலே பலருக்கு பயம் வந்துவிடுகிறது. இந்தியா என்ற பெயரை சொல்லவே அவர்கள் அச்சப்படுகிறார்கள். 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறது.

ஒரே தேர்தல் நடத்த வேண்டுமென்றால், இந்த ஆட்சியைக் கலைத்துவிடுவீர்களா... கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஆட்சிகளைக் கலைத்துவிடுவீர்களா... அங்கெல்லாம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிக்காலம் இருக்கிறது. கர்நாடகாவில் இப்போதுதான் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது. அந்த ஆட்சியையும் கலைப்பீர்களா...’ என்று கேள்விகளை அவர் எழுப்பியிருக்கிறார்.

மோடி, அமித் ஷா

2024-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பா.ஜ.க விரும்புவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. அப்படி, முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், மாநில அரசுகளையெல்லாம் கலைத்துவிட்டு அவற்றுக்கும் தேர்தல் நடத்துவார்களா என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆனாலும், வரும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மத்தியப்பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அந்தத் தேர்தல்களை, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்த பா.ஜ.க திட்டமிடலாம் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது.

முதல்வர் ஸ்டாலின் கேட்பது போல, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் ஆட்சிகளைக் கலைத்தால், அது பெரிய பிரச்னையாக மாறும். எனவே, பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்துவிட்டு, அவற்றுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்தலாம் என்கிற ஒரு திட்டம் பா.ஜ.க-வுக்கு இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மோடி

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏன் கொண்டுவர வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அடிக்கடி தேர்தல் வருவது தவிர்க்கப்படும், அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி செயல்படும், பணம் மிச்சமாகும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும். ஆனால், ‘அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருகிறார்கள்’ என்று விமர்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தேசிய கட்சியான பா.ஜ.க-வுக்கு மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியையோ, மாநிலக் கட்சிகள் அதிகாரத்தில் இருப்பதையோ விரும்புவதில்லை என்கிற விமர்சனம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். அப்படியென்றால், தங்கள் கட்சி மட்டுமே இந்தியாவில் கோலோச்ச வேண்டும் என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்களா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பிவருகிறார்கள். அதைத்தான் அதிபர் ஆட்சி முறை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறாரோ?



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்