Header Ads Widget

Doctor Vikatan: அதிக சத்தத்துடன் ஏப்பம்... பணியிடத்தில் தர்மசங்கடம்... தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 40. கடந்த ஒரு மாதமாக எனக்கு ஏப்பம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பெரிய சத்தத்துடன் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. வேலையிடத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை உண்டா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஏப்பம் என்பது எல்லா வயதினரும் சந்திக்கிற பிரச்னைதான். சாப்பிடும்போது அதிக அளவிலான காற்றையும் சேர்த்து விழுங்குவதால்தான் இப்படி வருகிறது. `இத்தனை காலமாக அப்படியெல்லாம் இல்லையே... திடீரென இந்தப் பிரச்னை ஏன் வர வேண்டும்?' என்று சிலர் கேட்கலாம். உடலானது உள்ளே போன அதிகப்படியான காற்றை வெளியேற்ற முயலும்.

தண்ணீர் குடிக்கும்போது கடகடவென வேகமாகக் குடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஸ்ட்ரா உபயோகித்துக் குடிக்கும் வழக்கம் அதிகமுள்ளோருக்கும் ஏப்பம் பெரும் பிரச்னையாக இருக்கலாம். சோமா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிக்கும்போது அவற்றின் மூலம் அதிக காற்று உள்ளே போக வாய்ப்பு உண்டு. அதனாலும் ஏப்பம் வரலாம்.

சோடாவோ, ஏரியேட்டடு பானங்களோ குடிக்கிற வழக்கமே இல்லை, ஆனாலும் ஏன் இந்தப் பிரச்னை பாதிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு நடுத்தர வயது அல்லது அதற்குப் பிறகுதான் `லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' எனப்படும் பால் ஒவ்வாமை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பனீர் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலோ, இரவு உணவுக்குப் பிறகு பால் குடித்தாலோ, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் காரணமாக ஏப்பம் வரலாம்.

அடுத்தது `ஆசிட் ரெஃப்ளெக்ஸ்' எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை. நெஞ்செரிச்சல் பிரச்னையை நேரடியாக உணர மாட்டார்கள். ஆனால், அதன் விளைவாக புளித்த ஏப்பம் மட்டும் வரலாம். பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லதுதான்... ஆனால், அதற்காக அதிக அளவில் வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றைப் பெரிதாக வெட்டிச் சாப்பிடுவது, அதன் செரிமானத்தை தாமதமாக்கி, ஏப்பமாக வெளிப்படுத்தலாம்.

எந்த உணவையும் நன்கு மென்று விழுங்குவதுதான் இதற்கான முதல் தீர்வு. ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம்பழச்சாற்றில் சில துளிகளை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து அப்படியே குடிப்பது தீர்வளிக்கும். வெறும் எலுமிச்சைப் பழச்சாறு மட்டும் பிடிக்காதவர்கள், சிறிது ஆரஞ்சுச் சாறும் கலந்து குடிக்கலாம். `நெஞ்செரிச்சலால் ஏப்பம் வரும் என்கிறீர்கள்... எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறெல்லாம் குடிக்கச் சொல்கிறீர்களே...' என்று கேட்பவர்கள், இதை முயற்சிசெய்து பார்த்தால் அது தரும் நிவாரணத்தை உணர்வார்கள். இப்படிக் குடிக்கும்போது பெரும்பாலும் உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் இருப்பதுதான் சிறந்தது. அப்படிக் குடிக்கவே முடியாது என்பவர்கள் ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

lemon

தினமும் இரவு படுப்பதற்கு முன் சாமந்திப்பூ டீயில் (கேமமைல் டீ) மலைத்தேன் சிறிது கலந்து குடிக்கலாம். பகல் நேரத்தில், பணியிடத்தில் இந்தப் பிரச்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்து வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறிது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோம்பும் துருவிய இஞ்சி சிறிதும் சேர்த்துக் கொதிக்க வைத்து பகல் வேளையில் இருமுறை குடிக்கலாம். இது அதிகபட்சமாக 50 முதல் 75 மில்லியைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்தும் உங்கள் பிரச்னை தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்