Header Ads Widget

சுற்றுலா சென்ற இடத்தில் ரெய்டு! - எம்.எல்.ஏக்களுக்கு `ஷாக்’ கொடுத்த போலி அமலாக்கத்துறை அதிகாரி

புதுச்சேரி, காலப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவான கல்யாணசுந்தரத்தின் செல்போனுக்கு நேற்று மாலை 3 மணிக்கு போன் செய்த ஒருவர், ``நான் சென்னை அமலாக்கத்துறையின் துணை ஆணையர் வரதராஜன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ கல்யாணசுந்தரமும் அவரை வருமாறு கூறியதையடுத்து, லாஸ்பேட்டை மகாவீர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் வரதராஜன். அப்போது, `கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய சொத்துகளின் விபரங்களை பதிவு செய்யவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகள் என்னை அனுப்பி உள்ளனர்’ என்று கூறியிருக்கிறார் வரதராஜன்.

அதற்கு, `என்னிடம் சொத்து மற்றும் வருமான வரி தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது.  நீங்கள் வேண்டுமானால் ரெய்டு நடத்திக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்.

எம்.எல்.ஏக்கள்

உடனே, `உங்கள் கணக்குகளை சரி செய்ய வேண்டும். அதனால் உயரதிகாரிகளை கொஞ்சம் கவனிக்க வேண்டும்’ என்று வரதராஜன் கூற, அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கல்யாணசுந்தரம். அதையடுத்து அங்கிருந்து கிளம்பிய வரதராஜன், லாஸ்பேட்டை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான வைத்தியநாதன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த எம்.எல்.ஏ வைத்தியநாதனிடம், `உங்கள் மீது பண மோசடி புகார் வந்திருக்கிறது. அதை நான் சரி செய்து விடுகிறேன். ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, ``அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. நானே கஷ்டத்தில் இருக்கிறேன்” என்று எம்.எல்.ஏ வைத்தியநாதன் கூறியதை கேட்டு ஷாக் ஆன அந்த வரதராஜன், ``இரண்டு நாட்கள் நான் புதுச்சேரியில்தான் இருப்பேன்.

பணத்தை தயார் செய்துவிட்டு என்னை தொடர்புகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். அங்கிருந்து கிளம்பிய வரதராஜன், மாலை 5 மணிக்கு உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு, அமலாக்கத்துறை அஸ்திரத்தை வீசியிருக்கிறார். அப்போது, ``நான் வீட்டில் இல்லை. நானே உங்களை கூப்பிடுகிறேன்’’ என்று கூறி போனை துண்டித்திருக்கிறார். அத்துடன் தனது ஆடிட்டர்களுக்கு இந்த விஷயத்தைக் கூறிய எம்.எல்.ஏ நேரு, போனில் பேசிய நபர் குறித்து விசாரிக்கும்படியும் கூறினார். அடுத்த அரை மணி நேரத்தில் ரெட்டியார்பாளையம் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன் வீட்டிற்குச் சென்ற வரதராஜன், `அமலாக்கத்துறை சென்னை பிரிவின் துணை ஆணையர் நான்.

போலி அதிகாரியிடம் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர்

உங்கள் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும். ரெய்டு வேண்டாமென்றால் உயாரதிகாரிகளை கவனிக்க வேண்டும்’ என்று சிவசங்கரனிடம் கூறியிருக்கிறார். அதற்கு சிவசங்கரன், ‘உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அப்போது தன்னிடம் அடையாள அட்டை இல்லை என்று கூறிய வரதராஜன் மீது எம்.எல்.ஏ சிவசங்கரனுக்கு சந்தேகம் எழுந்தது. அதுகுறித்து தன்னுடைய ஆடிட்டரிடம் அவர் விசாரித்தபோது, வரதராஜன் ஒரு போலி அதிகாரி என்பது தெரிய வந்தது. அதையடுத்து அங்கிருந்த எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள், வரதராஜனை பிடித்து தர்ம அடி கொடுத்து, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தெரிய வந்ததையடுத்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்ற எம்.எல்.ஏக்கள் நேரு, வைத்தியநாதன் மற்றும் கல்யாணசுந்தரம், எஸ்.பி பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் புகாரளித்தனர்.

போலி அதிகாரி வரதராஜன் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``இந்த வரதராஜன் திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு வந்த வரதராஜன், அபார்ட்மெண்ட் குடியிருப்பில் நாள் வாடகைக்கு தங்கியிருக்கிறார். அதன்பிறகு இருசக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டியிருக்கிறார். இவர் மீது ஏற்கெனவே சென்னை, திருச்சியில் மோசடி வழக்குகள் இருக்கின்றன. மேலும் இவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் முகவரிகளும், செல்போன் எண்களும் இருந்தன.

எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், நேரு, சிவசங்கரன்

அனைத்து தகவல்களையும் இண்டர்நெட்டில் இருந்து எடுத்து பதிவிறக்கம் செய்திருக்கிறார். எம்.எல்.ஏக்களுக்கு போன் செய்வதற்கு முன்பு விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் பேசியதாகவும், அதன்பிறகு திருமாவளவன் தன்னை தொடர்புகொண்டு தங்களிடம் கணக்கு வழக்குகள் சரியாக இருப்பதாகவும் தெரிவித்தார் என்றும் வரதராஜன் எங்களிடம் கூறினார். சுற்றுலா வந்த இடத்தில் செலவுக்கு பணம் இல்லாததால் கிடைத்த வரை லாபம் என்று எம்.எல்.ஏக்களை மிரட்டியிருக்கிறார். அவரை மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறோம்” என்றனர்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்