Header Ads Widget

Garba Death: கர்பா நடனமாடிய இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்! - `அலர்ட்' விடுத்த குஜராத் அரசு

நவராத்திரியையொட்டி குஜராத், மகாராஷ்டிரா உட்பட வடமாநிலங்களில் கர்பா நடனம் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. அதிகாலை வரை காதை பிளக்கும் இசையுடன் பெண்கள், வாலிபர்கள் இணைந்து ஆடும் கர்பா நடனத்தைக் காண, ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குஜராத்தில் இந்த நடனம் எப்போதும் மிகவும் பிரபலம் ஆகும். இந்த ஆண்டு குஜராத்தில் 24 மணி நேரத்தில் கர்பா நடனம் ஆடியபோது மாரடைப்பு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அகமதாபாதில் 24 வயது வாலிபர் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்பாகவே இறந்துபோனார். மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று காபட்வஞ்ச் என்ற இடத்தில் 17 வயது சிறுவனும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். 24 மணி நேரத்தில் குஜராத்தில் 10 பேர் கர்பா நடனம் ஆடியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாள்களில் கர்பா நடனம் ஆடியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டோர் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து இருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் பிரபலமான கர்பா நடன மையங்களுக்கு வெளியில் டாக்டர் வசதியுடன் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மாலை 8 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை கர்பா நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகள் உஷார்நிலையில் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு கர்பா நடனம் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் வந்து செல்ல வசதி செய்து வைக்கும்படியும், தாண்டியாவில் பங்கேற்பவர்களுக்கு தண்ணீர் போதிய அளவு கிடைக்க வகை செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கர்பா நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக கர்பா பயிற்சியின்போது 3 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். குஜராத்தில் கர்பா நடனத்தின்போது மாரடைப்பு ஏற்படுவது இது புதிதல்ல. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்