மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வங்கதேச அணியும் மோதியது. இதில் தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நான்கு போட்டிகளிலும் அதிரடியான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால், சேஸிங் செய்த போட்டியில் நெதர்லாந்து அணியிடம் அப்செட்டைச் சந்தித்திருந்தது. இந்த வெற்றி ஃபார்முலாவை இப்போட்டியிலும் பின்பற்றியதே தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிய ஏறக்குறைய தீர்மானம் செய்துவிட்டது எனலாம். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தது. டாஸைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இருவரும் களமிறங்கினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/40dc2389-b985-4fd3-aaa0-8ef9442ecb64/F9Na9A4bAAAoaOy.jpg)
முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் வெற்றி வாகையைச் சூடி வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த போட்டியின் தொடக்கம், சற்று பின்னடைவு தான். முதல் ஐந்து ஓவர்களில் நிதானத்தைக் கடைபிடித்து 25 ரன்கள் எடுத்திருந்தது, ஓப்பனிங் ஜோடி. சிக்ஸர், பவுண்டரி என அதிரடியாக விளையாடத் தொடங்கியிருந்தார், டி காக். ஆனால், அடுத்த 7வது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. சொரிஃபுல் இஸ்லாம் வீசிய இந்த ஓவரில் ரீஸா ஹென்றிக்ஸ் க்ளீன் போல்ட் ஆனார்.
அடுத்த ஓவரிலேயே ஸ்பின்னரை களமிறக்கி மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்தார், கேப்டன் ஷகிப் அல் ஹசன். இந்த முறை வாண்டர் டஸ்ஸன் ஆட்டமிழந்து வெளியேறினார். மெஹிதி ஹசன் வீசிய 8வது ஓவரில் எல்.பி.டபுள்யு விக்கெட் விழுந்தது. அப்போது தென்னாப்பிரிக்க அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்து 2 பேட்ஸ்மென்களை இழந்திருந்தது. இதற்குப் பிறகு வந்த மார்க்ரம், அணியைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக விளையாடினார். இவர்களின் நிதானமான ஆட்டத்தால் 12 ஓவர்கள் முடிவில் 50 ரன்களைக் கடந்தது, தென்னாப்பிரிக்க அணி. இந்த தொடரில் "I'm not just a ordinary person" என மூன்று சதங்களைப் பதிவு செய்து அதிரடியின் அடையாளமாய் விளையாடி வருகின்றார், டீ காக்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/d8e72e14-961c-465d-8621-39c11b40d9ef/F9Mnp8PW8AMAewf.jpg)
இவரின் சீற்றத்தை இந்தப் போட்டியிலும் காண முடிந்தது. சிக்ஸர், பவுண்டரி என அசால்ட்டாக ஸ்கோர் செய்து வந்த டீ காக்கிற்கு, மார்க்ரம் நிதானமாக ஈடுகொடுத்து வந்தார். 18வது ஓவரில் 47 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார், டீ காக். இதற்கிடையில் எந்த விக்கெட்டையும் எடுக்காமல் வங்கதேச அணியின் பௌலர்கள், தங்களின் எனர்ஜியை வீணடித்துக் கொண்டிருந்தனர். அரைசதம் அடித்த முனைப்போடு ஆடிய டி காக் - மார்க்ரம் இணையின் சீர்மிகு இன்னிங்ஸால், 21வது ஓவரில் அணியின் ஸ்கோர் சதத்தைத் தொட்டது.
கான்கிரீட் மோல்டிங்கை தாங்கிப் பிடிக்கும் சாரங்களைப் போல ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் விளையாடியது தான், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்குக் காரணம். இந்த ஜோடியின் சமரசமான பார்ட்னர்ஷிப்பில் ரன்கள் குவிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் 26வது ஓவரில் பவுண்டரி அடித்து மார்க்ரம் அரைசதத்தைக் கடந்தார். அடுத்த ஐந்து ஓவர்களுக்கு களத்தில் நீடித்த இவர், 31வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து, 60 ரங்களுடன் அவுட் ஆனார். மார்க்ரமின் விக்கெட்டை எடுத்ததுதான், வங்கதேச அணிக்கு வந்த வினை. அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த க்ளாசன், டீ காக்குடன் சேர்ந்து போருக்குத் தயாரானார். இதற்குப் பிறகு வந்த 19 ஓவர்கள், வங்கதேச அணிக்கு நிச்சயம் பெரும் மிரட்சியைக் கொடுத்திருக்கும். 35வது ஓவரின் போது, 101 பந்துகளில் சதமடித்து அசத்தினார் டி காக். இதற்குப் பிறகு பேட்டில் இருந்து வந்த சத்தங்களே பேரிடியாக ஒலிக்கும் அளவிற்கு சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் மாறிமாறி அடித்து வந்தது, இந்த ஜோடி. 40 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 238 ஆகத்தான் இருந்தது. ஆனால், அடுத்த நான்கு ஓவர்களிலேயே ஸ்கோர் 300 ரன்களைத் தொட்டது. வங்கதேச அணியின் பௌலர்கள் மோசமான ஸ்பெல்லை வீசி, கடைசி 10 ஓவர்களில் 140+ ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/3597cd5a-bc44-4b05-97db-ec8e89afd451/F9NbATebMAAasCb.jpg)
பெரிய பெரிய ஷாட்களை அடித்து ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விட்டு வந்த டீ காக், 46வது ஓவரில் அவுட் ஆனார். இவர் 140 பந்துகளில் 174 ரன்கள் (15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்திருந்தார். ஆள் தான் மாறியதே தவிர, அணியின் ரன்ரேட் மாறவில்லை. அடுத்ததாக டேவிட் மில்லர் களத்திற்குள் வர, இவரும் சிக்ஸர் கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரோடு அதிரடியாக விளையாடி சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார், க்ளாசன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/bc62ea6a-b0e2-474c-9f49-a518fb821d04/F9NEQW6WoAACUXp.jpg)
இந்த அதிரடியான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, தென்னாப்பிரிக்க அணி. இதற்கடுத்து, நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த ரன் குவியலை விட, மேலும் ஒருரன் எடுத்து வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாதது தான். ஆனால், எதிரணிக்கு இணையாக வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் விளையாடிய வங்கதேச அணி, 46.4 ஓவர்களில் ஆல் - அவுட் ஆகியது. அடுத்த இன்னிங்ஸிற்கு தான்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் குமார் தாஸ் இருவரும் வங்கதேச அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். வங்கதேச அணியின் தடுமாற்றம் முதல் பந்திலேயே வெளிவரத் தொடங்கியது. தான்ஸித் ஹசன் எதிர்கொண்ட இன்னிங்ஸின் முதல் பந்தே டேஞ்சரான பந்துதான். இதில் அலர்ட் ஆகியிருந்தாலும், அடுத்த 7வது ஒவரிலேயே விக்கெட் விழுந்தது. வங்கதேச அணியின் சரிவுக்கு பிள்ளையார் சுழியிட்டு தொடங்கி வைத்தார், தான்ஸித் ஹசன். யான்சென் வீசிய பந்து, பேட்டில் எட்ஜ் ஆகி விக்கெட்கீப்பர் க்ளாசனின் கைக்குச் சென்றது. வங்கதேச அணிக்கு "வில்லன் யாருடா?" எனக் கேட்டால், அது விக்கெட் கீப்பர் க்ளாசன் தான். பேட்டிங்கில் பிளந்து கட்டியது ஒருபக்கம் இருந்தாலும், முதல் மூன்று விக்கெட்டுகளும் விக்கெட் கீப்பர் க்ளாசனின் கைகளிலேயே விழுந்தது. ஒரே மாதிரி சொல்லி வைத்தது போல, ஷான்டோவும் ஷகிப் அல் ஹசனும் அவுட்டாகி வெளியேறினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/4654870f-dbb4-4c30-9be9-8eda5e1b5bc0/F9OH10_bMAEy5Mv__1_.jpg)
10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது, வங்கதேச அணி. இதற்குப் பிறகு, சில ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த முஷ்ஃபிகுர் ரஹீமும் அவுட் ஆனார். அடுத்ததாக மஹ்மதுல்லா களமிறங்கினார். இதற்கிடையே, 14வது ஓவரில் தான்ஸித் ஹசன் சிக்ஸர் ஒன்றை அடிக்க, வங்கதேச அணி 50 ரன்களைக் கடந்தது. ஆனால், அடுத்த ஓவரில் அவுட் ஆகிய லிட்டன் தாஸ், "நானும் கிளம்புறேன் மாமே!" என மஹ்மதுல்லாவிடம் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். இதற்குப் பிறகு, மஹ்மதுல்லா மட்டும் களத்தில் நின்று வங்கதேச அணிக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மஹ்மதுல்லா கோபித்துக் கொள்வார் என சில ஓவர்கள் தாக்குப் பிடித்துவிட்டுச் சென்றனர். இப்படியாக, 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தனர். இதற்குப் பிறகும் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால், மஹ்மதுல்லாவிடம் இருந்த சாமர்த்தியம் யாரிடமும் இல்லை. ஆனால், இவர் மட்டும் இல்லையென்றால் வங்கதேச அணிக்கு இது மிகமோசமான தோல்வியாக இருந்திருக்கும். அடுத்து வந்த ஹசன் மஹ்மது மற்றும் முஷ்தஃபிசூர் ரஹ்மான் இருவரும் சில ஓவர்கள், மஹ்மதுல்லாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தி வந்த மஹ்மதுல்லா 45வது ஓவரில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் 111 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து அசத்தியிருந்தார். இறுதியாக, 46.4 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி ஆல்-அவுட் ஆகியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/580fd363-9545-4b07-a928-552c8ad9a4af/F9ONXtkbMAM_9m_.jpg)
இந்த அதிரடியான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, தென்னாப்பிரிக்க அணி. இதற்கடுத்து, நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.
from Latest news
0 கருத்துகள்