Header Ads Widget

வேலூர்: காதலிப்பதாகக் கதைகட்டிய தாய்மாமன்; கழுத்தைத் துண்டாக வெட்டிய அக்காள் மகன் - நடந்தது என்ன?!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்திலுள்ள கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு மோகன்ராஜ், செல்வராஜ் என இரண்டு மகன்களும், லட்சுமி, தனலட்சுமி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி என நான்கு மகள்களும் இருந்தனர். இவர்களில், 30 வயதாகும் இளைய மகன் செல்வராஜைத் தவிர மற்ற அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் மோகன்ராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து, மோகன்ராஜின் மனைவி, மகள், மகன் ஆகிய மூன்று பேரும் செல்வராஜுடன் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை அதே பகுதியிலுள்ள தென்னந்தோப்புக்குள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் செல்வராஜ் சடலமாகக் கிடந்தார். தலை துண்டாகும் அளவுக்குக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரின் உடலைச் சுற்றியும் ரத்தம் தோய்ந்திருந்தது.

கொலைசெய்யப்பட்ட செல்வராஜ்

இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, குடியாத்தம் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவுசெய்து, கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், கொலையாளிகளைப் பிடிக்கவும் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, நேற்று மாலை குடியாத்தம் அம்மணாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) சரஸ்வதி முன்னிலையில், கொலைசெய்யப்பட்ட செல்வராஜுடைய அக்காள் லட்சுமியின் மகன் ஜோதிபாசு (23), மற்றோர் அக்காள் விஜயலட்சுமியின் 16 வயது மகன், அண்ணன் மோகன்ராஜின் 14 வயது மகன் ஆகிய மூன்று பேரும் திடீரெனச் சரணடைந்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து, செல்வராஜைக் கொன்றதாகக் கூறியபோது, கிராம நிர்வாக அதிகாரியே அதிர்ச்சியடைந்தார். காரணம், சரணடைந்த மூன்று பேரில், இரண்டு பேர் சிறார்கள். அதிலும், ஒருவன் 9-ம் வகுப்புப் பயிலும் மாணவன். இதையடுத்து, 23 வயதான ஜோதிபாசுவிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்துகொண்டார் கிராம நிர்வாக அலுவலர்.

ஜோதிபாசு கூறுகையில், ‘‘என் இளைய தாய்மாமன் செல்வராஜுக்கும், என் அம்மாவுக்கும் சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ‘அக்கா’ என்றும் பார்க்காமல், என் அம்மாவின் காதை அவர் அறுத்துவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட ஜோதிபாசு

அதுமட்டுமின்றி, பெரிய மாமன் மோகன்ராஜ் இறந்துபோன நிலையில், அவரின் மகளும், நானும் காதலிப்பதாக சின்ன மாமன் செல்வராஜ் கதைகட்டிவிட்டு, எங்களிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார். இதற்கெல்லாம், ஒரு முடிவு கட்டுவதற்காகத்தான் கொலைசெய்யத் திட்டம் வகுத்தோம். நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில்தான், நேற்று முன்தினம் இரவு போதையில் விழுந்து கிடந்தார். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து, தேங்காய் வெட்டும் கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு, ஓடி வந்துவிட்டோம்’’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, மூன்று பேரும் குடியாத்தம் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைக் கைதுசெய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலைசெய்யப்பட்ட செல்வராஜ் முறை தவறி சில மோசமான செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும், இதையெல்லாம் கவனித்த அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளும் ஆத்திரத்தில் கொலைக்குத் துணிந்ததாகவும்கூட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்