Header Ads Widget

2 லட்சம் பெண்கள்... மோடி கூட்டத்தில் அதிரடி காட்டத் தயாராகும் கேரள பாஜக! - பின்னணி என்ன?

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள்.

கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு, 2 லட்சம் பெண்களைத் திரட்டுவதற்கு கேரளா பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது.

மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், கேரளாவில் பா.ஜ.க தன் பலத்தைக் காண்பிப்பதற்கான இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியென்றால், அதற்கு கேரளா அரசியலில் தனி கவனமும் முக்கியத்துவம் கிடைக்கும் என்று கேரளா பா.ஜ.க கணக்குப் போடுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், ``பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார். இது ஒரு வரலாற்றுச் சாதனை. அதற்காக பிரதமரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தனித்துவம் வாய்ந்த, சிறப்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறோம்" என்றார்

மோடி

மேலும், ``பிரதமர் மோடி பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு லட்சம் பெண்களைத் திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சிக்கு, `ஸ்ரீ சக்தி சங்கமம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இது போன்ற ஒரு நிகழ்ச்சி, கேரளாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெங்கும் நடக்காதது போன்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். அங்கன்வாடி, ஆசிரியர்கள், 100 நாள்கள் திட்டத்தில் பயன்பெறுபவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலாசாரச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று பல்வேறு தரப்பட்ட பெண்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்கள்" என்றார் சுரேந்திரன்.

கேரளாவைப் பொறுத்தளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்தான் மக்கள் செல்வாக்கு மிகுந்த கட்சிகள். மூன்றாவதுதான் பா.ஜ.க. அதாவது, மூன்றாவது பா.ஜ.க என்றால், இரண்டு கட்சிகளுக்கும் அடுத்ததாக மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க கேரளாவில் இருக்கிறது என்று அர்த்தமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடிய செல்வாக்கு கொண்ட கட்சிகள். இந்த இரண்டு கட்சிளுக்கு வெகு தொலைவுக்கு அப்பால் பா.ஜ.க இருக்கிறது.

சபரிமலை

இந்துத்துவா அரசியல் செய்வதால், சபரிமலை விவகாரம் போன்ற ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எழும்போதெல்லாம் முன்னணியில் நின்று அரசியல் செய்து கவனம் பெறுவதை, பா.ஜ.க வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மற்றபடி, சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டாலும்கூட, ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க-வால் வெற்றிபெற முடிவதில்லை. இந்தளவுக்குத்தான், கேரளாவில் பா.ஜ.க-வின் பலம் இருக்கிறது.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதால், அதன் செல்வாக்கை வைத்து கேரளாவில் பா.ஜ.க அரசியல் செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்ததற்காக, பிரதமர் மோடியைப் பாராட்டுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், நாட்டில் எங்கும் இதுவரையில் நடைபெற்றிருந்தாத ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் சுரேந்திரன் சொல்வது மிகைப்படுத்தலான ஒன்றுதான். அதாவது, ‘கேரளாவில் மட்டுமல்ல, இந்தியாவில் இதற்கு முன்பு நடைபெற்றிராத ஒரு வித்தியாசமான, பிரமாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும்’ என்று அவர் கூறுகிறார்.

வரலாற்றைப் புரட்டிய ‘வனிதா மதில்!’

33 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவதற்காக வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற பாராட்டு விழா வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். ஏனென்றால், கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் சென்று வழிபடுவதில் நிலவும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கேரளாவில் நடைபெற்ற ‘வனிதா மதில்’ என்ற அணிவகுப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 920 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 50 லட்சம் பெண்கள் மனிதச்சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.

பெண்கள் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்கூட, அதற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை பா.ஜ.க நடத்தியது. பெண்களின் உரிமைக்கு எதிராக பா.ஜ.க நிற்கிறது என்று பா.ஜ.க-மீது அப்போது விமர்சனம் எழுந்தது. அதே மாநிலத்தில், இரண்டு லட்சம் பெண்களைத் திரட்டி பிரதமர் மோடியைப் பாராட்டவிருக்கிறார்கள். கேரளாவில் பா.ஜ.க முன்னேறுவதற்கு ‘ஸ்ரீசக்தி சங்கமம்’ கைகொடுக்குமா?



from India News https://ift.tt/16WeFX2
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்