Header Ads Widget

`300 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்'... டீ தான் காரணமா? - மருத்துவர் கூறும் விளக்கம்!

தைவானில் உள்ள பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

சியோ யு என்ற 20 வயது பெண் தைவானில் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு கடுமையான ஜுரமும், பின் இடுப்புக்கு கீழே தாங்க முடியாத வலியும் ஏற்பட்டு இருக்கிறது. 

இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு, சிடி ஸ்கேன் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இவரது வலது பக்க சிறுநீரகம் வீங்கி இருப்பதையும் கற்கள் மற்றும் திரவம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அறுவை சிகிச்சை

சிடி ஸ்கேனில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த கல் ஒவ்வொன்றும் 5 மில்லி மீட்டர் முதல் 2 சென்டி மீட்டர் அளவில் இருந்ததாகக் காட்டியுள்ளது. ரத்தப் பரிசோதனையில் அவரின் வெள்ளையணுக்களும் அதிக அளவில் உயர்ந்திருப்பது தெரிந்தது. 

அப்பெண்ணின் சிறுநீரகத்தில் உள்ள திரவம் வெளியேற ஆன்டிபயாடிக் கொடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகத்தில் இருந்த 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

``கோடைக்காலத்திலும் வசந்த காலத்திலும் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படுவது சகஜம். குறைவான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் விளைவாக சிறுநீர் அதிகளவு செறிவூட்டப்படுகிறது. இதனால் தாதுக்கள் ஒன்றிணைந்து கற்களாக மாறுகின்றன. 

சியோவுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காததால் அதற்கு பதிலாக Bubble Tea-ஐ மட்டும் குடித்திருக்கிறார். (தைவானில் இந்த டீ பிரபலம்). 

Bubble Tea!

தைவானில் 9.6 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீரக கற்கள் உண்டாகும் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சிறுநீரக கற்களின் பாதிப்பு பொதுவாக 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் காணப்படும்’’ என்று சியோவுக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் லிம் சை-யாங் கூறியுள்ளார்.  

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அப்பெண் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

எந்த உடல்நலக் குறைவின் போதும் பலரும், `தண்ணிய நல்லா குடிச்சா இந்தப் பிரச்னையெல்லாம் வருமா... தண்ணிய குடி, தண்ணிய குடி' என்று கூறிக் கேட்டு இருப்போம். பல உடல்நல சிக்கல்களை சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே நம்மால் தடுத்து விட முடியும். அந்த வகையில் இயற்கை நமக்கு கொடுத்துள்ள திரவ அமிர்தம் தண்ணீர்...

சரி போய் தண்ணிய குடிங்க!



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்