Header Ads Widget

Vijayakanth: ``விஜயகாந்த் ஆசை நிறைவேறிடுச்சு; என் ஆசை நிறைவேறல!'' கலங்கும் `ஆடிட்டர்' ஶ்ரீதர்

`இப்ப ஒரு நடிகரா நான் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் விஜயகாந்த் அவர்கள் தான். நான் நடிகரா வரணும்னு என்னைவிட அவர்தான் விரும்பினார்!'

தழுதழுத்த குரலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுடைய நினைவுகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார் நடிகர் ஆடிட்டர் ஶ்ரீதர். 

ஆடிட்டர் ஶ்ரீதர்

"ஏவிஎம் குழுமத்துக்கு ஆடிட்டர் ஆகத்தான் போனேன். அப்படியே கொஞ்ச, கொஞ்சமா அங்க கதை டிஷ்கஷனில் தொடங்கி எக்ஸிகியூடிவ் புரொடியூசராகவும் இருந்தேன். அப்போ எடிட்டர் ஜெயச்சந்திரன்னு ஒருத்தர் இருந்தார். அவர் என் நண்பர். அவர் விஜயகாந்த் வச்சு படம் எடுக்கலாம்னு சொன்னார். அந்த சமயம் விஜயகாந்த் தான் டாப்ல இருந்தார். ஊமை விழிகள் படமெல்லாம் செம ஹிட். ஏவிஎம் சார்பாக விஜயகாந்த்தை சந்திக்க என்னைக் கூட்டிட்டுப் போனார். பார்த்ததும் மதுரை தானே?னு தான் கேட்டார். விஜயகாந்த் அறிமுகம் எனக்கு நான் ஸ்கூல் படிக்கும்போதே இருந்தது. எங்க தெருவுல அவரை சந்திச்சிருக்கேன். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தாலே கொஞ்சம் பயம். முதன்முறை சந்திச்சப்ப இதெல்லாம் சொல்லல. மெதுவா அவர்கிட்ட பழைய நினைவுகள் எல்லாம் சொன்ன பிறகு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா பழக ஆரம்பிச்சிட்டோம்.

 நான் படம் பண்றேன். ஆனா, ஒரு கண்டிஷன். ஷூட்டிங் முடியுற வரைக்கும் நீ தான் ஸ்பாட்டுக்கு வரணும்னு சொன்னார். அது ஏன் சொன்னார்னுலாம் தெரியல.. நானும் சரின்னு சொல்லி அவர் கூடப் போய் முழுப் படத்தோட ஷூட்டிங்கும் பார்த்தேன். அந்தப் படத்துடைய பெயர் `மாநகர காவல்'. ஒவ்வொரு சீன்லயும் ஆக்டர் யாராவது இல்லைன்னா `ஶ்ரீதர் இருக்கான்ல அவனைக் கூப்பிடு'னு சொல்லிட்டே இருப்பார். சார் நான் உண்டு என் கணக்கு உண்டுன்னு இருக்கேன் ஏன் சார் என்னை இழுத்துவிடுறீங்க?னு ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன். `நான் உன்னை கவனிச்சு தான் சொல்றேன்.. உனக்குள்ள நடிப்புத் திறமை இருக்கு.. அதனால தான் நான் உனக்கு வாய்ப்பு கொடுக்க சொல்றேன். இல்லைன்னா நான் ஏன் சொல்லப் போறேன்? எவ்ளோ பேர் இந்த வாய்ப்புக்காக என்கிட்ட கேட்டுட்டு இருக்காங்க. நீ பெரிய நடிகனாவேன்னு எனக்கு தோணுது. என் கணிப்பு எப்பவும் சரியாதான் இருக்கும்'னு சொன்னார். அந்தப் படத்துல முக்கியமான கேரக்டர் ஒண்ணு நடிக்கச் சொல்லி சொன்னார்.

விஜயகாந்த்

அப்போ, `சார் இந்தப் படத்துல ஒரு வேலை தான் பார்க்கணும், நான் ஆடிட்டிங் முழுசும் பார்த்துட்டு இருக்கேன். அடுத்தப் படம் நீங்க பண்ணும்போது முக்கியமான ஒரு கேரக்டர் கொடுங்க நான் பண்றேன்'னு சொன்னேன். நடிக்க வேண்டாங்கிறதுக்கு இப்படி சொல்லிட்டா முற்றுப்புள்ளி வச்சிடலாம்னு அப்போதைக்கு சொல்லிட்டு அந்தப் படத்துடைய வேலைகளை கவனிச்சேன். அந்தப் படத்துடைய கடைசி நாள் ஷூட்டிங்ல ஒரு டைரக்டர் என்கிட்ட கதை சொன்னார். `சத்ரியன்' பட டைரக்டர் அவர். `கதை கேட்டீயா?'னு கேட்டார். கேட்டேன்.. நல்லா இருக்குனு சொல்லவும், `நீ தான் அந்தக் கேரக்டர் பண்ணனும்!'னு சொன்னார். மூணு நாள் ஷூட்டிங்னு சொன்னாங்க. `மாநகர காவல்' படத்துடைய ஒர்க் முடிக்காம என்னால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன்.

`மாநகர காவல்' பட கடைசி நாள் ஷூட்டிங்ல என்னை கூப்பிட்டு, `ரெண்டு படம் பூஜை பண்ணப் போறேன். அதுல `சத்ரியன்' பண்ண வேண்டாம். இன்னொரு படத்துல நடி.. அந்தப் படத்துடைய ஷூட் உடனே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இந்தப் படத்தை முடிச்சிடலாம்!'னு சொல்லிட்டார். ஏவிஎம்கிட்டேயும் நடிக்க பர்மிஷன் கேட்டுட்டேன். ஏவிஎம்லேயே அந்தப் படத்தோட ஷூட்டும் நடந்துச்சு. அப்படி நான் நடிச்ச முதல் படம் தான் `பரதன்'. அப்படி என் மேல நம்பிக்கை வச்சு என்னை நடிகனாக மாத்தினதே விஜயகாந்த் தான்!

விஜயகாந்த்

அவரும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எல்லாருக்கும் அவர் என்ன சாப்பிடுவாரோ அதுதான். அப்போதெல்லாம் என்னை ஒரு நாள் பார்க்கலைன்னாலும் ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லுவார். நடிகர் சங்கத்துல மணிக்கணக்கா நானும், அவரும் பேசியிருக்கோம். அவர் அரசியலுக்கு வந்தப் பிறகு அப்படியே எல்லாமே குறைஞ்சிடுச்சு. அதுக்குப் பிறகு அவரை எவ்வளவோ சந்திக்கணும்னு முயற்சி பண்ணினேன். ஆனா, சந்திக்க முடியாமலேயே போயிருச்சு.

அவருக்கு உடம்பு முடியாம மீண்டும் மருத்துவமனையில் சேர்த்திருக்காங்கங்கிற செய்தி கேட்டதுமே மனசே சரியில்ல. இவ்ளோ சீக்கிரம் இப்படி ஆகும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. குடும்பத்தில் ஒரு அண்ணனை இழந்த உணர்வு. என்னை நடிக்க வச்சு அழகு பார்க்கணும்னு நினைச்ச அவர் ஆசை நிறைவேறிடுச்சு. அவர் ஆசைப்பட்ட மாதிரி நான் நடிகனாகத்தான் இருக்கேன். ஆனா, அவரை சந்திக்கணுங்கிற என் ஆசை தான் நிறைவேறாத ஆசையாகிடுச்சு!" என்றவர் பேச முடியாமல் அமைதியானார்.

விஜயகாந்த்

இரங்கல்கள் கேப்டன்!



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்