Header Ads Widget

`இன்று ஹேமந்த் சோரன்... அடுத்து கெஜ்ரிவால்?’ நீளும் லிஸ்ட்! - ’பிஸி’ மோடில் அமலாக்கத்துறை

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.எம்.எம்.எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆண்டுவருகிறது. ஜே.எம்.எம் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி, சுரங்க ஏல முறைகேடு உள்ளிட்ட சில வழக்குகள் இருக்கும் நிலையில், அதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது.

ஹேமந்த் சோரன், கல்பனா சோரன்

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ச்சியாக சம்மன் அனுப்பிவந்தது. ஏழு சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத அவர் மீது தனது பிடியை அமலாக்கத்துறை இறுக்கியது.

அதைப் புரிந்துகொண்ட ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாரானார். அதைத் தொடர்ந்து, ராஞ்சியிலுள்ள முதல்வர் இல்லத்தில் வைத்து ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 20-ம் தேதி விசாரித்தனர். மீண்டும் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அவரும், ஜனவரி 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக ராஞ்சியிலுள்ள அமலாக்கத்துறை அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

மோடி, அமித்ஷா

இதற்கிடையில், வழக்கு தொடர்பான சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க ஜனவரி 27-ம் தேதி டெல்லிக்குச் சென்றார் ஹேமந்த் சோரன். ‘ஜனவரி 31-ம் தேதி ஆஜராகிறேன்’ என்று அவர் சொல்லியிருந்தும்கூட, அதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகளால் பொறுத்திருக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன அழுத்தமோ, டெல்லியிலுள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு திடீரென்று சென்றார்கள். ஆனால், அங்கு ஹேமந்த் சோரன் இல்லை.

உடனே, ‘ஹேமந்த் சோரனைக் காணவில்லை’ என்று வதந்திகளைப் பரப்பி, அது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானப் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சாலை வழியாக ஜனவரி 30-ம் தேதி காலையில் ராஞ்சிக்குச் சென்ற ஹேமந்த் சோரன், தன் கூட்டணி எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். தான் கைது செய்யப்படும் பட்சத்தில் தன் மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க விரும்பினார். ஆனால், எம்.எல்.ஏ-வாக இல்லாத கல்பனா சோரன் முதல்வர் பதவியை ஏற்றால், ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும்.

சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் வரவிருக்கிறது. எனவே, சட்ட ரீதியான சில சிக்கல்கள் இருப்பதால், கல்பனா சோரன் முதல்வராக வாய்ப்பில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எதிர்பார்த்ததைப்போலவே, ஜனவரி 31-ம் தேதியன்று ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அதையடுத்து, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தற்போது, ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகயிருக்கிறார்.

அமலாக்கத்துறை திட்டமிட்டபடி ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டார்கள். இது, ஜே.எம்.எம் கட்சிக்கு மட்டுமல்லாமல், ‘இந்தியா’ கூட்டணிக்கும் ஒரு நெருக்கடிதான். இதற்கு முன்பு நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் எல்லா கூட்டங்களிலும் ஹேமந்த் சோரன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூட்டணி

ஜார்க்கண்ட் மாநிலம் 2000-ம் ஆண்டு புதிதாக உருவானது. அதிலிருந்து பா.ஜ.க-வும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. 2019 தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடித்து ஹேமந்த் சோரன் முதல்வரானார். இந்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஜே.எம்.எம். கட்சிக்கு நெருக்கடி கொடுத்து, வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப்பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதே நேரத்தில், ஹேமந்த சோரனை கைது செய்வதன் மூலம் ‘இந்தியா’ அணியையும் பலவீனப்படுத்துவது. இதுதான் பா.ஜ.க-வின் கணக்கு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு அச்சாரமிட்டவர்களில் ஒருவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க கூட்டணிக்கு மாறிவிட்டார். தற்போது, ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை இழந்து, சிறைக்குப் போய்விட்டார். இதை, தனக்கான வெற்றியாக பா.ஜ.க நினைக்கிறது. ஹேமந்த் சோரனைப் போல, பா.ஜ.க-வின் ஹிட் லிஸ்டில் இன்னும் சில ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் இருக்கிறார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

அவர்களில் முக்கியமானவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஹேமந்த் சோரனுக்கு அடுத்தடுத்து சம்மன் அனுப்பியதைப்போலவே, கெஜ்ரிவாலுக்கு பல சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியிருக்கிறது.

அவரும், ஹேமந்த் சோரனைப்போலவே விசாரணைக்கு ஆஜராகாமல் வருகிறார். எனவே, அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட்டாக கெஜ்ரிவால் இருப்பார் என்று தெரிகிறது. அதேபோல, ஆர்.ஜே.டி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இந்த வழக்குகளில் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் இன்னும் வேகம் பெறும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/K3qlRfN
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்