Header Ads Widget

விதிகளைமீறி கல்குவாரிகள் ஏலம்... குஷியில் ஆளுங்கட்சியினர்... மௌனத்தில் எதிர்க்கட்சிகள்!

தென்மாவட்டங்களில் கல்குவாரி அமைக்க, திடீர் திடீரென்று அரசு வெளியிட்டுவரும் அறிவிப்புகளைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சம்பந்தப்பட்ட கிராம மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் ஆளும்கட்சிப் புள்ளிகளின் கைகளில் பசை புரள்வதற்காகவே மதுரை மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் கல்குவாரிகள் ஏலம் விடப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. அது குறித்து விசாரித்தோம்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் என்ற பெயரில் மலைகள், புராதன சின்னங்கள், கோயில்கள், விளைநிலங்கள், பாசனக் கால்வாய்கள் ஆகியவற்றை அழித்து அட்டகாசம் செய்த குவாரி மாஃபியாக்கள்மீது 2012-ம் ஆண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், பல குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், மதுரை, மேலூர் வட்டாரத்தில் இரண்டு இடங்களில் புதிதாக கிரானைட் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியதால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், கடந்த மாதம் எதிர்ப்புகளை மீறி மேலூர், வாடிப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்களைக்கூட நடத்தாமல் 21 கல்குவாரிகளுக்கான ஏலம் விடப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் பட்டூர் வட்டார கிராம மக்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு நிர்வாகி கம்பூர் செல்வராஜ், “கிரானைட் குவாரிகளால் மதுரை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். மதுரை கலெக்டர்களாக இருந்த சகாயம், அன்சுல் மிஸ்ரா போன்றவர்கள் இந்த கிரானைட் குவாரிகளுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய மாவட்ட கலெக்டர், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் இரண்டு இடங்களில் புதிதாக கிரானைட் குவாரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். தொடர் போராட்டத்தால் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவைத்தோம்.

இந்தச் சூழலில் மேலூர், பேரையூர், வாடிப்பட்டி தாலுகாக்களிலுள்ள கொண்டையம்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, ராஜாக்கள்பட்டி, மாணிக்கம்பட்டி, வஞ்சிநகரம், அய்யாபட்டி, கம்பூர், உறங்கான்பட்டி, கச்சிராயன்பட்டி, பட்டூர், வண்டாரம், சூலப்புரம், மங்கள்ரேவு உள்ளிட்ட 13 கிராமங்களில் 21 கல்குவாரிகள் அமைப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டு, ஏலமும் விட்டிருக்கிறது அரசு. இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே இயங்கிவந்த குவாரிகளால் மக்கள் அடைந்த துன்பங்கள் அளவற்றவை. சுற்றுச்சூழல் பாதிப்பும், இயற்கைப் பேரிடர்களும் அதிகரித்துவரும் நிலையில், மீண்டும் கல்குவாரிகளை அமைக்க அரசு அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதுமட்டுமல்ல, சட்டப்படி எந்தவொரு குவாரி அமைக்க வேண்டுமென்றாலும் அதற்கு, கனிம வளத்துறை, உள்ளாட்சித்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல துறைகளிடம் அனுமதி பெற்று, விதிகளைப் பின்பற்ற வேண்டும், ஆனால், குறிப்பிட்ட 21 குவாரிகளை அமைக்க கருத்துக்கேட்புக் கூட்டங்களைக்கூட முறையாக நடத்த வில்லை மாவட்ட நிர்வாகம். சட்ட விதிகளையும் பின்பற்றவில்லை. போராடும் கிராம மக்கள்மீது வழக்கு போடுவது, கட்சி, சாதிரீதியாகப் பிரித்து, போராட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட வேலைகளை ஆளுங்கட்சியினர் செய்துவருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் இது குறித்து வாய் திறப்பதில்லை. தேர்தல் நேரத்தில் எதிர்கொள்ளவேண்டிய செலவுகளுக்காக இதுபோல அவசர அவசரமாக மதுரை உட்பட பல மாவட்டங்களிலும் குவாரிகளைத் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

மதுரை மட்டுமன்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கல்குவாரிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான குவாரிகளை அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் புள்ளிகளே பினாமி பெயரில் எடுத்து நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. சில இடங்களில் மகளிர் சங்கங்களின் பெயரில் குவாரிகளை ஏலத்தில் எடுத்து அரசியல்வாதிகளே நடத்திவருகிறார்கள்.

இது குறித்துப் பேசிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களில்கூட ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் கையே ஓங்கியிருக்கிறது. தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சூழலியலாளர்களை மிரட்டியதோடு, அவர்களைப் பேசவிடாமலும் தடுத்து அராஜகம் செய்தது ஆளுங்கட்சிப் பிரமுகர் தரப்பு. இயற்கை வளங்களைக் காக்கவும், இந்த அராஜகங்களைத் தடுத்து நிறுத்தவும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். போராட்டங்களையும் முன்னெடுப்போம்” எனக் கொதித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் விளக்கம் கேட்டோம். “அனைத்து விதிகளையும் கடைப்பிடித்துத்தான் குவாரிகள் ஏலம் நடைபெற்றது. குறிப்பிட்ட குவாரிகள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்தவைதான். அவற்றால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட குவாரிகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே ஏலம் விடப்பட்டிருக் கிறது. சில இடங்களில் அரசு நிர்ணயித்ததைவிடக் குறைவான தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதால் அங்கு மட்டும் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

யாரோ சிலர் பலனடைவதற்காக, பொதுமக்களின் எதிர்ப்பை அடியோடு புறந்தள்ளிவிடக் கூடாது அரசு!

- செ.சல்மான்

படங்கள்: நா.ராஜமுருகன்



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்