Header Ads Widget

கட்சி மாறி வந்தவர்களில் 106 பேருக்கு சீட் - பாஜக-வின் ‘பலே’ வியூகம் பலன் தருமா?!

இந்தியாவில் அரசியல்வாதிகள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றுதான். தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என எல்லா கட்சிகளிலும் கட்சி மாறியவர்கள் உண்டு. ஆனால், கட்சி மாறிவந்தவர்களில் அதிகமானோர் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கவனத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

பாஜக

அதுவும், மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சியின் வேட்பாளர்களில் 25 சதவிகிதம் பேர் வேறு கட்சிகளிலிருந்து மாறிவந்தவர்கள் என்பது கவனத்துக்குரியது.

இந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் மொத்தம் 435 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில், 106 வேட்பாளர்கள் வேறு கட்சிகளிலிருந்து மாறிவந்தவர்கள். அவர்கள், பா.ஜ.க-வின் மொத்த வேட்பாளர்களில் 25 சதவிகிதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாரத்தில் மோடி

குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்கள். சில மாநிலங்களில் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால், வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் பரக்பூர் தொகுதி எம்.பி-யாக இருப்பவர் அர்ஜுன் சிங். இவர், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வில் இணைந்து பரக்பூர் தொகுதியிலிருநது எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டவர். இந்த முறை மீண்டும் இதே தொகுதியில் அவர் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸில் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தபஸ் ராய். இவர், பா.ஜ.க-வில் இணைந்த பிறகு கொல்கத்தா வடக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

சுவேந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சில்பத்ரா தத்தா. இவர் 2021-ம் ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்தார். தற்போது, டம் டம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸில் நகராட்சித் தலைவராக இருந்த சௌமேந்து அதிகாரி, தற்போது பா.ஜ.க வேட்பாளராக கான்தி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர், பா.ஜ.க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரியின் சகோதரர் ஆவார். திரிணாமுல் காங்கிரஸில் ஹவுரா மேயராக இருந்த ரிதின் சக்கரவர்த்தி, தற்போது ஹவுரா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜோதிராதித்யா சிந்தியா

அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்கள். பா.ஜ.க சார்பில் ஃபெரோஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் ராணா குர்மித் சிங் சோதி, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

அதேபோல, ஹோஷியார்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான ராஜ்குமார் சப்பேவால் வேறு கட்சியிலிருந்து வந்தவர். மத்தியப்பிரதேச மாநிலம் குணா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, 2019 மக்களவைத் தேர்தலில் இதே குணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

ஆந்திராவில் களமிறக்கப்பட்டிருக்கும் ஆறு பா.ஜ.க வேட்பாளர்களில் ஐந்து பேர் வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்கள். தெலங்கானாவில் பா.ஜ.க-வின் 17 வேட்பாளர்களில் 11 பேர் கட்சி மாறி வந்தவர்கள். இவர்கள் எல்லோருமே கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கி, கடந்த மார்ச் மாதம் வரை வேவ்வேறு கட்சிகளிலிருந்து வந்து பா.ஜ.க-வில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி

ஆனால், வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியிருப்பதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், செல்வாக்கு மிக்க நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பதாகவும், இது பா.ஜ.க-வின் வெற்றிக்கான உத்திகளில் ஒன்று என்றும் பா.ஜ.க தரப்பில் கூறுகிறார்கள். அதே நேரம் நீண்ட காலம் கட்சியில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கட்சிக்குள்ளும் சில கலக குரல்கள் எழத் தொடங்கியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/sGFyBDH
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்