டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி பதவிக்கு வந்த பிறகு புதிய மதுபானக் கொள்கையை கொண்டு வந்தது. அதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரது மனைவி பிரசாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் வரும் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 'சட்டவிரோதமாக தன்னை கைது செய்துள்ளதாக அறிவிக்க வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 3.5.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டுமா என்பது குறித்தும் தங்களுக்கு விளக்கம் தேவை' என தெரிவித்ததுடன் இந்த வழக்கை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் வரும் 25-ம் தேதி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தால் பாஜகவுக்கு தேர்தல் பின்னடைவா? என்கிற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த எப்ஐஆரில் தேர்தல் சமையத்தில் கைது செய்து இருக்கிறார்கள். இதைத்தான் நீதிமன்றம் கேள்வியெழுப்பி இருக்கிறது. காங்கிரஸ், கெஜ்ரிவால் கூட்டணி காரணமாக டெல்லியில் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் தலைவரை மிரட்டி உங்கள் பக்கம் கொண்டு செல்கிறீர்கள். குஜராத்தில் வேட்பாளரை வாபஸ் வாங்க வைக்கிறீர்கள். எதுவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்கிறீர்கள். எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில்தான் கைது செய்து சிறையில் வைத்து இருக்கிறீர்கள்.
ஆம் ஆத்மியை உங்களால் தோற்கடிக்க முடியவில்லை. கவர்னர் மூலமாக தொந்தரவு கொடுத்தீர்கள். அதிகாரிகளை மாற்றும் அதிகாரத்தை கெஜ்ரிவாலிடம் இருந்து பிடுங்கி கவர்னருக்கு தருகிறீர்கள். ஒருபடி மேலே சென்று எதிர்க்கட்சி தலைவரை சிறைக்கு அனுப்புகிறீர்கள். குற்றம் செய்துள்ளாரா என்பதை நீதிமன்றம் விசாரிக்கும். உங்களது வாஷிங் மெஷினில் போட்ட எத்தனை பேர் உத்தமர்களாக வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. எனவே எந்த சூழலில் கைது செய்துள்ளீர்கள் என்பதை நீதிமன்றம் நன்கு புரிந்துவைத்துள்ளது. ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. நாங்கள் கேள்விதான் கேட்டோம் என்றும் நீதிமன்றம் சொல்கிறது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் ஒருவேளை கெஜ்ரிவால் வெளியில் வந்தால், நிச்சயம் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும். அது தேர்தலிலும் எதிரொலிக்கலாம், அது டெல்லி, பஞ்சாப் போன்ற ஆம் ஆத்மி வலுகாக இருக்கும் இடங்களில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/O05tNys
via IFTTT

0 கருத்துகள்