‘அதானிக்காகவே மோடி அரசு செயல்படுகிறது’, ‘அம்பானிக்காகவே பா.ஜ.க அரசு செயல்படுகிறது’ என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். எதிர்க் கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்த பிரதமர் மோடி, தற்போது தேர்தல் சமயத்தில் கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித் ஷாவும், தனியார் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துவருகிறார்கள். அந்த வகையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்’ என்று பிரதமர் மோடி ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து சில கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை தொழிலதிபர் டாடா, பிர்லா ஆகியோருக்கு ஆதரவானவர் என்று முன்னர் நாடாளுமன்றத்தில் விமர்சித்தார்கள். இப்போது அம்பானி, அதானி ஆகியோருக்கு ஆதரவானவர் என்று என்னை நேரு குடும்பம் குற்றம் சாட்டுகிறது.
நம் தேசத்துக்கு வளம் சேர்க்கக்கூடிய தொழிலதிபர்களை தொழிலாளர்கள் போலவே மதிக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில் அக்கறை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணம், நிர்வாக திறன் படைத்தவர்களின் மூளை, தொழிலாளர்களின் கடினமான உழைப்பு என அனைத்தும் அவசியம்’ என்றார்.
மேலும், “சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்களையும், சாதனையாளர்களையும் அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கௌரவிக்காமல் எப்படி இருக்க முடியும்? அவ்வாறு செய்யாவிட்டால் விஞ்ஞானிகளை எப்படி உருவாக்க முடியும்?” என்றார் மோடி.
‘கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மட்டுமே பிரதமர் மோடி செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார். இந்தக் குற்றச்சாட்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதாலோ என்னவோ, இதையொட்டி சில கேள்விகளையும், விவகாரங்களையும் பிரதமர் மோடி எழுப்பிவருகிறார்.
சுதந்திர இந்தியாவில், மத்தியில் ஆட்சிசெய்த அனைவருமே நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் சுமூகமான உறவில்தான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில், 1950-களிலும், 1960-களிலும் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களாக இருந்த டாடா, பிர்லா ஆகியோருடன் அன்றைய பிரதமர் நேரு சுமூகமாக உறவைப் பேணியிருக்கிறார். அதுபோலவே, இன்றைக்கு இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களாக இருக்கும் அதானி, அம்பானி ஆகியோரிடம் பிரதமர் மோடி நெருக்கம் காட்டுகிறார். அதில் என்ன தவறு? என்று பா.ஜ.க தரப்பினர் கேட்கிறார்கள்.
ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ரஃபேல் விவகாரத்தை எழுப்பினால், போஃபோர்ஸ் பாவங்களை அது அடித்துச்சென்றுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு மனரீதியிலான ஒரு பிரச்னை” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “என் நாட்டில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என் நாட்டின் பெருமைக்குரியவை இல்லையா? என் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உலகில் கடைகளை ஏன் வைத்திருக்கக்கூடாது? உலகம் முழுவதுமிருந்து மக்கள் ஏன் என் நாட்டுக்கு வரக்கூடாது? நீங்கள் எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்விகளை வீசுகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் பதிலடியும், அவர் எழுப்பும் எதிர் கேள்விகளும் நியாயமானவை என்று அரசியல் விமர்சகர்களில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதே நேரம்,, ‘டாடா, பிர்லா பற்றியெல்லாம் பேசக்கூடிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளாகவும், கடன் தள்ளுபடிகளாகவும் பல லட்சம் கோடிகளை வாரி வழங்கியது குறித்து பேசாதது ஏன்?’ என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இன்னும் மீதியிருக்கும் மூன்று கட்டத் தேர்தல் பிரசாரத்தில் இதற்காக பதில்களை பிரதமர் மோடி சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/yvb5VpO
via IFTTT

0 கருத்துகள்