Doctor Vikatan: எனக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இதை குணப்படுத்த சித்தா அல்லது அலோபதி மருத்துவம் இரண்டில் எது சிறந்தது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படுகிற அலர்ஜி சம்பந்தப்பட்ட நோய். ஒரு நபருக்கு அவரது மரபியலிலேயே அலர்ஜிக்கு உள்ளாகும் தன்மை இருக்கும் பட்சத்தில், அந்த நபர் தூசு, குளிர்ந்த சீதோஷ்ணம், மகரந்தம், கடுமையான வாசனை போன்றவற்றை எதிர்கொள்ளும்போது, அவரது மரபியல் தன்மை காரணமாக உடனடியாக உடலில் ரசாயன மாற்றம் நிகழும். காற்றுப்பாதை சுருங்கும். அதனால் காற்று சீராகப் போகாததால், மூச்சுவிட சிரமப்படுவார். இதுதான் ஆஸ்துமாவுக்கான அடிப்படை காரணம்.
இப்படி அந்த நபரின் உடலுக்குள் நிகழும் ரசாயன மாற்றத்தை மருத்துவமொழியில் 'இன்ஃப்ளமேஷன்' (Inflammation ) என்று சொல்கிறோம். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் வீக்கம். அந்த வீக்கத்தைக் குறைக்க, 'இன்ஹேல்டு கார்டிகோ ஸ்டீராய்டு' (Inhaled corticosteroids ) வகை மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இன்ஹேலர் என்ற வார்த்தையும், ஸ்டீராய்டு என்ற வார்த்தையும் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அந்த பயம் தேவையற்றது.
ஸ்டீராய்டு என்பதை நாம் மைக்ரோகிராம் அளவில் கொடுப்பதால், நேரடியாக நுரையீரலுக்குள் சென்றுவிடும். அதில் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. உபயோகிப்பதற்குப் பாதுகாப்பானது. குழந்தைகளுக்குக் கூட பயமின்றி அதைப் பரிந்துரைப்பதன் காரணம் இதுதான். அலோபதியில் ஆஸ்துமாவுக்கான அடிப்படை சிகிச்சை இப்படித்தான் இருக்கும். கூடவே, ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க அவர்களுக்குக் கற்றுத் தருவோம்.
பிராணாயாமம், மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவுமா என நிறைய பேர் கேட்பதுண்டு. அந்த விஷயங்கள் ஆஸ்துமா பாதிப்புக்கு நல்லவைதான்... ஆனால், அவற்றை முழுமையான சிகிச்சையாகக் கருதக்கூடாது. பிராணாயாமம், யோகா போன்றவை சப்போர்ட்டிங் சிகிச்சைகளாக உதவும். அலோபதி சிகிச்சையில் ஆஸ்துமாவுக்கு கொடுக்கும் சிகிச்சை பற்றி இங்கே குறிப்பிடப்பட்ட விஷயங்களை அதே அடிப்படையில்தான் சித்த மருத்துவத்திலும் பின்பற்றுகிறார்கள் என்றால் நல்லது. ஆனால், சித்த மருத்துவத்தில் எப்படிப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை எப்படி வேலை செய்கின்றன என்பதை எல்லாம் முறையான சித்த மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெற்று உங்களுக்கானதைத் தேர்ந்தெடுங்கள்.
ஒரே பிரச்னைக்கு அலோபதி, சித்தா என இரண்டு சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளலாமா என்றும் சிலர் கேட்பதுண்டு. இரண்டிலும் என்னென்ன மருந்துகளைக் கொடுக்கிறார்கள் என்பது தெரிந்தால் தான், இரண்டையும் எடுப்பதால் ஏதேனும் விளைவுகள் வருமா என்பதைச் சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக இந்த விஷயத்தில் ஆலோசனை சொல்வது என்பது சரியாக இருக்காது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news

0 கருத்துகள்