Header Ads Widget

நமக்குள்ளே... வயநாடு நிலச்சரிவு: பழங்குடி குழந்தைகளின் கண்களில் உறைந்திருந்த அந்தக் கேள்வி?!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு... தேசத்தையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. கனமழை, காட்டாற்று வெள்ளம் என முண்டக்கை, சூரல்மலா, வெள்ளரிமலா ஆகிய கிராமங்களை மண்ணுக்குள் புதைத்திருக்கிறது. பள்ளிகள், வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் விழுங்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் எண்ணிக்கை 413 என்பதையும் தாண்டும் என்கிற அச்சம் தொடர்கிறது.

சடலங்கள், மரண ஓலங்கள், பின்னணி கதைகள் என... காட்சிகள் மனம் கனக்க வைக்கின்றன. சூரல்மலாவில் வசித்த, வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பணியாளரான நீத்து ஜோஜோ, நிலச்சரிவு குறித்த முதல் அவசரநிலை அழைப்பை அந்த நள்ளிரவிலும் மேற்கொண்டார். காவல் நிலையம், கன்ட்ரோல் ரூம், ஆம்புலன்ஸ் என அச்செய்தி உலகத்துக்கு முதன்முதலில் அவரால்தான் சென்று சேர்ந்தது. பின்னர், தன் கணவர், குழந்தையை மேடான பகுதிக்கு அனுப்பிவிட்டு, பக்கத்து வீட்டினரையும் காப்பாற்ற முனைந்த நீத்து, நிலச்சரிவுக்கு பலியானது கொடுமை.

நமக்குள்ளே...

இப்படி நீளும் இழப்புக் காட்சிகள்... நம்மை ஜீவன் வற்றிப்போகச் செய்ய, தொடரும் மீட்புக் காட்சிகளோ நெகிழ்ச்சிக் கண்ணீர் தருகின்றன. ராணுவத்தின் முப்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர், மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் என 11 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் களமாடி வருகின்றனர். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த உயிர்கள் மீட்கப்பட்டபோது, இரண்டாவது பிறவியாக உணர்ந்தன. திருமணத்துக்குச் சேர்த்து வைத்திருந்த நகைகள், சேமிப்புப் பணம் என மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள், ஆசுவாசம் தந்தன.

இருவாஞ்சிப்புழா ஆற்றின் குறுக்கே, இந்திய ராணுவத்தினர் பல சவால்களுக்கு மத்தியில் இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் எழுப்பிய மீட்புப் பாலம், பல நூறு மக்களை மீட்டது. இக்குழுவுக்குத் தலைமையேற்ற ராணுவ அதிகாரி சீதா ஷெல்கேவுக்கு அம்மக்கள் தெரிவித்தனர் ஆயுளுக்குமான நன்றிகள்.

வன அலுவலர்கள் ஆறு பேர், ஆபத்தான வழுக்குப் பாறைகள் நிறைந்த தடத்தில் எட்டு மணி நேரமாகப் போராடி, ஏழு கி.மீ மலையேறி, ஐந்து நாள்களாகச் சாப்பிடாமல் குகைக்குள் சிக்கிக்கிடந்த பழங்குடி குடும்பத்தை மீட்டனர். அவர்கள், நெஞ்சோடு கட்டித் தூக்கி வந்த அந்தக் குழந்தைகளின் கண்கள் கேட்ட கேள்வியாகத் தோன்றியது, இதுதான் தோழிகளே - ‘இது யார் குற்றம்?’

வணிக நோக்கத்துடன் இயற்கைக்கு எதிராக சூழலியல் தவறுகள் செய்து கட்டடங்களை எழுப்பியவர்கள், லாப நோக்குடன் அதற்குத் துணைபோன மாநில அரசு, வானியல் எச்சரிக்கையைத் தவறவிட்ட மத்திய அரசு, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுடன் இதற்கு துணைபோய்க் கொண்டிருக்கும் மக்களாகிய நாம் என அனைவருமே குற்றவாளிகள்தான். இந்தப் பேரழிவு... நம் அனைவருக்குமே இயற்கை கொடுத்திருக்கும் குற்றப்பத்திரிகைதான்!.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்