Header Ads Widget

Jharkhand: `அரசியலில் ஓய்வு கிடையாது... புதிய கட்சி தொடங்கப் போகிறேன்!' - சம்பாய் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலமோசடி வழக்கில் இந்த ஆண்டு ஜனவரியில் சிறைக்கு சென்றபோது, ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் மூத்த தலைவரும், மாநில எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நலத்துறை அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். பிப்ரவரி 2 முதல் ஜூலை 3 வரை 5 மாதங்கள் முதல்வராக சம்பாய் சோரன் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

சம்பாய் சோரன் - ஹேமந்த் சோரன்

இவ்வாறிருக்க, சம்பாய் சோரன் பாஜகவில் இணையப்போவதாக அல்லது கட்சியிலிருந்து வெளியேறப்போவதாகக் கடந்த சில நாள்களாகவே பேச்சுகள் அடிபட்டன. அதற்கேற்றவாறு சம்பாய் சோரனும், ``சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை அழைக்க முதலமைச்சருக்கு உரிமை இருந்தாலும், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலைக்கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. கூட்டத்தின்போது, ​​என்னை ராஜினாமா செய்யும்படி கூறப்பட்டது. எனக்கு அதிகாரப் பேராசை இல்லை என்பதால் உடனடியாக ராஜினாமா செய்தேன். ஆனால், என் சுயமரியாதையின் மேல் விழுந்த அடியால் என் இதயம் உணர்ச்சிவசப்பட்டது. என் முழு வாழ்க்கையையும் எந்தக் கட்சிக்காக அர்ப்பணித்தேனோ, அந்தக் கட்சியில் இனி எனக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

கனத்த இதயத்துடன், அதே சட்டமன்றக் கூட்டத்தில் நான் சொன்னேன் 'என் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்றிலிருந்து தொடங்கப்போகிறது. ஒன்று, அரசியலிலிருந்து ஓய்வுபெறுவது. இரண்டாவதாக, எனக்கென்று தனி அமைப்பை உருவாக்குவது. மூன்றாவதாக, இந்தப் பாதையில் எனக்கு ஒரு துணை கிடைத்தால், அவருடன் மேலும் பயணிப்பது' " என்று ட்வீட் செய்து, கட்சியிலிருந்து விலகப்போவதைக் கிட்டத்தட்ட உறுதிசெய்தார். இந்த நிலையில், அரசியலில் ஓய்வுபெறப் போவதில்லையெனவும், புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் சம்பாய் சோரன் அறிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில் இதனைத் தெரிவித்த சம்பாய் சோரன், ``அரசியல் ஒய்வு அல்லது தனி அமைப்பு அல்லது நண்பர் என்று மூன்று சாய்ஸ் முன்பு குறிப்பிட்டிருந்தேன். எனவே, அரசியலில் நான் தற்போது ஓய்வுபெறப் போவதில்லை. புதிய கட்சியை அமைத்து வலுப்படுத்தப் போகிறேன். ஒருவேளை இந்தப் பயணத்தில் ஒரு நண்பரைக் கண்டால் அவரோடு பயணிப்பேன்" என்றார். மேலும், விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத்துக்குள் புதிய கட்சி சாத்தியமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ``அது உங்களுடைய பிரச்னை அல்ல. ஒரே நாளில் 30,000 முதல் 40,000 தொண்டர்கள் வரமுடியும் எனும்போது, புதிய கட்சி ஆரம்பிப்பதில் எனக்கென்ன பிரச்னை. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும்" என்று சம்பாய் சோரன் பதிலளித்தார்.



from India News https://ift.tt/ZARjkV8
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்