Header Ads Widget

ஆம்பூர்: மேம்பால பணியில் திடீர் விபத்து... அலறிய வடமாநிலத் தொழிலாளிகள் - விரைந்து மீட்ட மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரத்தை இணைத்துப் பிடிக்கும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ரூ.140 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரத்தோடு இரவுப் பகலாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 750 மீட்டர் தொலைவுகொண்ட இந்த உயர்மட்ட மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கின. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

சாரம் சரிந்து கிடக்கும் காட்சி

மேம்படுத்தப்பட்ட மேம்பாலச் சாலையாக அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 25 அடி அகலம் கொண்டதாகக் கூறப்படும் இந்த உயர்மட்ட மேம்பாலத்துக்கு ராட்சத கான்கிரீட் பிடிப்போடு 30-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த நிறுவனம் மூலமாக வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியைச் செய்கிறார்கள்.

இந்த நிலையில், 21-ம் தேதியான நேற்று இரவு தூண்களின் ஒருப்பக்கமுள்ள கட்டுமான இரும்பு சாரம் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்கள்.

மீட்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள்

இதையடுத்து, பிறத் தொழிலாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை விரைவாக மீட்டார்கள். இதில், 6 தொழிலாளிகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அங்கு விரைந்துசென்ற காவல்துறையினரின் காரிலேயே அவர்கள் அழைத்துசெல்லப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மீட்புப் பணிகளும் தொடர்ந்தன. எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபரீதச் சம்பவத்தால், ஆம்பூர் நகரமே பரபரப்புக்குள்ளாகிப் போனது.



from India News https://ift.tt/CYb2EJ3
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்