Header Ads Widget

பழனி: சேதமடைந்த மின் கம்பம்; அச்சத்தில் மக்கள்... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

சிதலமடைந்த மின்கம்பத்தை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை கேட்டும் அலட்சியம் காட்டி வருகின்றனர் அதிகாரிகள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பொருந்தலாறு அணை பகுதியில், கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு உட்பட்டது இந்த மின்கம்பம். இங்கு பல கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக படுமோசமாக சேதம் அடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, "இந்த மின் கம்பம் மிகவும் மோசமடைந்து விட்டது. சுற்றியுள்ள கான்கிரீட்டுகள் அனைத்தும் இடிந்து ,உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. எப்போது விழும் என்ற அச்சத்துடனே அருகாமையில் நாங்கள் வசிக்க வேண்டி இருக்கிறது.

மேலும் இது மழைக்காலம் என்பதால் மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்பது மேலும் அச்சத்தை எழுப்புகிறது" என்று வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ``பலமுறை இதனை சரி செய்யும்படி கேட்டோம். கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கூறினால் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று சொல்கின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினால், அவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.

இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சேதமடைந்த நிலையிலேயே இருக்கின்றது இந்த மின் கம்பம். அருகாமையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கே எங்களுக்கு பயமாக இருக்கின்றது. இதனால் எந்த ஓர் அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது. அதற்கு முன்பு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, இதனை எங்களுக்கு சரி செய்து கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.



from India News https://ift.tt/gh4Qesa
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்