Header Ads Widget

மனைவி மீது சந்தேகம்; கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது- சிவகாசியில் பரபரப்பு!

சிவகாசி அருகே மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர், தகராறின்போது கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சுப்பட்டி கக்கன் காலனியை சேர்ந்தவர் ராம்கலா(வயது 29). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாலாஜி(35) என்பவருக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாலாஜி குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து கேட்டரிங் வேலை செய்து வந்தார்.

காவல் நிலையம்

இந்தநிலையில், மனைவி ராம்கலாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் ராம்கலா கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிவகாசி அருகே பிச்சுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மனைவி பிரிந்து சென்றதில் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி, ராம்கலாவை சமாதானம் செய்து அழைத்து செல்வதற்காக பிச்சுப்பட்டியில் வந்து தங்கியுள்ளார். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலாஜி வீட்டில் கிடந்த கத்தியால் ராம்கலாவின் கழுத்தில் குத்தி அறுத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் ராம்கலாவை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்கலா ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறினர். இந்த கொலை குறித்து எம்.புதுப்பட்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்" என கூறினர்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்