Header Ads Widget

`காங்கிரஸ் ஆதரித்தால் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டி'- எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பி.வி.அன்வர்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் தொகுதியில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்றவர் பி.வி.அன்வர். தொடர்ந்து 2-வது முறையாக சி.பி.எம் ஆதரவுடன் எம்.எல்.ஏ-வாக வென்றார். காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்த பி.வி.அன்வர் காங்கிரஸ் கோட்டையாக இருந்த நிலம்பூரை தன்வசமாக்கியிருந்தார். இந்த நிலையில் பினராயி விஜயனின் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பி.வி.அன்வர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்த பி.வி.அன்வர் எம்.எல்.ஏ, கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தனது தொகுதியான நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தினார். தனது ஆதரவாளர்களை திரட்டி மலப்புறம் மாவட்டம், மஞ்சேரியில் டி.எம்.கே என்ற இயக்கத்தைத் தொடங்கினார். டொமாக்ரட்டிக் மூவ்மெண்ட் ஆஃப் கேரளா என்பதன் சுருக்கமான டி.எம்.கே கட்சி மூலம் மக்கள் பிரச்னைகளை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார் பி.வி.அன்வர். இந்த நிலையில் கருளாயி பகுதியில் காட்டு யானை மிதித்ததில் பழங்குடியின இளைஞர் மரணமடைந்த சம்பவத்தை கையில் எடுத்து போராடினார். வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.வி.அன்வர் எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 40 பேர் நிலம்பூர் வனத்துறை அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில் போலீஸுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நிலம்பூர் வன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக எம்.எல்.ஏ பி.வி அன்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரத்தில் கோர்ட் ஜாமீனில் வெளியே வந்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பி.வி.அன்வர்

இதற்கிடையே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பி.வி.அன்வர். அக்கட்சியில் அவருக்கு கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ-வான பி.வி.அன்வர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருப்பதால் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவரது பதவி பறிக்கப்படலாம் என்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபை சபாநாயகர் சம்சீரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கடந்த சனிக்கிழமை அவர் இ மெயில் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்ததாகவும், இப்போது நேரில் வழங்குவதாகவும் பி.வி.அன்வர் தெரிவித்தார்.

பி.வி.அன்வர்

இதுகுறித்து பி.வி.அன்வர்கூறுகையில், "இனி நிலம்பூர் தொகுதியில் நான் போட்டியிடப்போவதில்லை. காங்கிரஸ் ஆதரித்தால் அடுத்த தேர்தலில் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டியிட தயாராக உள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை ஒருங்கிணைத்து 14 மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நிர்வாகிகளை நியமிக்க உள்ளேன்" என்றார்.



from India News https://ift.tt/NKnyWxm
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்