நேற்று பிரான்ஸில் நடந்த உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஏஐ மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உருவாகிவருவதைக் குறிப்பிட்ட அவர், ஏஐ பற்றிய கவலைகளையும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் பேசினார். இந்தியா அதன் சொந்த ஏஐ மாதிரியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த அவர், உலக நாடுகள் ஏஐ பயன்பாட்டின் நிர்வாக எல்லைகளை வரையறுக்க ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/g6b5qols/GjgudDYacAEGWUn.jpeg)
AI மாநாட்டில் மோடியின் பேச்சு:
"நீங்கள் உங்களது மருத்துவ அறிக்கையை ஏஐயில் பதிவேற்றினால், அது உங்கள் உடல் நிலைப் பற்றி எளிமையாக புரியவைத்து விடுகிறது. ஆனால் அதே ஏஐயிடம் ஒருவர் இடது கையில் எழுதும் புகைப்படத்தை உருவாக்கக் கூறினால், வலது கையில் எழுதும் புகைப்படத்தை உருவாக்கவே வாய்ப்பு அதிகம். ஏனென்றால் ஏஐக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தும் தரவுகளில் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. தரவுகள்தான் அதிகாரம் செலுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவில் பல நேர்மறை சாத்தியங்கள் இருந்தாலும், நாம் பல 'சார்புகள் (Biases)' குறித்து கவனமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நம் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை செயற்கை நுண்ணறிவு மறு வடிவமைப்பு செய்துவருகிறது. இது மனித வரலாற்றின் மற்ற தொழில்நுட்ப சாதனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
செயற்கை நுண்ணறிவு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளருவதுடன், விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதில் ஆழமாக ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. எனவே நாம் (உலக நாடுகள்) அனைவரும் இணைந்து இதற்கான தரநிலைகளை நிர்ணயிக்கவும், நிர்வகிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அப்படி செய்வதன் மூலம், நாம் பகிர்ந்துகொள்ளும் மதிப்புகளை நிலைநிறுத்தவும், அபாயங்களை நிவர்த்திசெய்யவும், நம்பிக்கையை உருவாக்கவும் முடியும்...
இந்த நிர்வாகம் குறித்து நாம் ஆழமாக சிந்திப்பதுடன், வெளிப்படையாக உரையாட வேண்டும். இது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக உலக தெற்கு நாடுகளை. ஏனெனில் அவற்றுள் தான், கனிணி சக்தி, திறமை, தரவுகள் மற்றும் நிதிவளங்கள் இல்லாத இடங்கள் இருக்கின்றன.
ஆரோக்கியம், கல்வி, விவசாயம் என பலதுறைகளில் செயலாற்றி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை ஏஐயால் மாற்ற முடியும்.
உலகின் நிலையான வளர்ச்சிக்கு வேண்டிய இலக்குகளை அடையும் பயணம் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.
இதனை அடைவதற்காக நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்த ஓப்பன் சோர்ஸ் அமைப்பை உருவாக்க வேண்டும். சார்புகள் இல்லாத தரமான தரவுகளை உருவாக்க வேண்டும்.
டெக்னாலஜியை ஜனநாயகப்படுத்தி மக்களை மையப்படுத்திய செயலிகளை உருவாக்க வேண்டும்.
சைபர் பாதுகாப்பு, பொய் தகவல்களைப் பரப்புதல் மற்றும் டீப் ஃபேக் போன்ற கவலைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். தொழில்நுட்ப உள்ளூர் சூழல்களில் வேரூன்றி பயனளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஏஐயால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் வேலைகள் பறிபோவதுதான். டெக்னாலஜியால் வேலைகள் பறிபோகாது, வேலைகளின் தன்மை மட்டுமே மாறும் என்பதை வரலாற்று ரீதியாக பார்த்து வருகிறோம். ஏஐயின் எதிர்காலத்துக்கு ஏற்ப மக்களை திறமைபடுத்தவும் மறு-திறமைபடுத்தவும் நாம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/k67lj5ej/Gjguf31bYAAsQU.jpeg)
ஏஐ செயல்பாட்டுக்கான அதிக ஆற்றல் தேவையை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இதற்கு எதிர்காலத்தில் பசுமை ஆற்றல் வளங்கள் பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் 140 கோடி மக்களுக்காக குறைந்த விலையில் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தியா அதன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப சொந்த ஏஐ லார்ஜ் லேங்குவேஜ் மாடலை உருவாக்கிவருகிறது. எங்களிடம் உலகின் மிகப் பெரிய ஏஐ திறமையாளர் குழுக்கள் உள்ளன.
நண்பர்களே, மனிதகுலத்தின் போக்கை வடிவமைக்கும் AI யுகத்தின் விடியலில் நாம் இருக்கிறோம். மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனத்தில் உயர்ந்துவிடுமோ என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால், நமது கூட்டு எதிர்காலத்திற்கும், பகிரப்பட்ட விதிக்குமான திறவுகோல் மனிதர்களாகிய நம்மைத் தவிர வேறு யாரிடமும் இல்லை.
அந்த பொறுப்புணர்வு நம்மை வழிநடத்த வேண்டும்" என்றார்.
from Vikatan Latest news
0 கருத்துகள்