Header Ads Widget

``சூரியனார் கோயில் மடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சிலைகள் திருட்டு'' - மகாலிங்கசுவாமி புகார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார். இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையானது.

மகலிங்க சுவாமி

இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், 'ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை மகாலிங்கசுவாமி இழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, மகாலிங்கசுவாமி ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்தார். மேலும், ''முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போகிறேன் என கூறிச் சென்றார்.

இதையடுத்து, இந்த விவகாரம் அடங்கியது. இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு மகாலிங்கசுவாமி தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராமிடம் மனு ஒன்றை அளித்தார். இதில், திருமங்கலகுடியை சேர்ந்த பாபு என்கிற ரத்தினவேல், சூரியனார்கோவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் மற்றும் சில சமூக விரோதிகள், சிலரின் துாண்டுதலின் பேரில், என் மீது போலியாக விமர்சனம் செய்து மானபங்கப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பி விட்டார்கள். இது ஏன் என்று பதற்றத்தில் அப்போது எனக்கு புரியவில்லை. தற்பொழுது தான் ஊர் மக்கள் பேசுவதில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது.

சூரியனார் கோயில் ஆதினத்தின் மடாதிபதி

மேலும், 500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள். விலை உயர்ந்த மரகதங்கள் படிகங்கள், நான் இல்லாத நேரத்தில் எடுத்துச் சென்று விட்டனர். எனவே, இந்த புகாரை தீர விசாரித்து, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். மேலும், என்னுடைய உயிருக்கும், சூரியனார்கோயில் ஆதீன சொத்திற்கும் சமூக விரோதிகளால், ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மகாலிங்சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் வடமாநில யாத்திரை சென்றிருந்தேன். ஆத்மார்த்த சுவாமிகள் படிக லிங்கம், சுமார் ஒரு அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான், நடராஜர் - சிவகாமசுந்தரி, முருகன் ஐம்பொன் சிலை என ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருடு போயுள்ளது. நான் மீண்டும் ஆதீனமாக தொடர உள்ளேன்." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்