Header Ads Widget

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மதுரை வந்த உள்துறை அமைச்சரை வரவேற்ற மதுரை ஆதீனம்

"தாடி வைத்து, குல்லா அணிந்த இருவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்" என்று மதுரை ஆதீனம் கடந்த மே மாதம் 2- ஆம் தேதி கூறிய குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் அப்போது பதற்றத்தை ஏற்படுத்தியது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்குப்பின் பாரம்பரியம் மிக்க ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக்காச்சாரியார் கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்தார். பதவி ஏற்ற நாள் முதல் இவரும் முந்தைய ஆதீனம் போல அரசியல் ரீதியாக பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.

இந்நிலையில், சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த 2-ஆம் தேதி மதுரையிலிருந்து காரில் சென்ற போது உளுந்தூர்ப்பேட்டை அருகே ஆதீனத்தின கார் மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதாகவும், அந்த சம்பவத்தில் ஆதீனம் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் செய்தி பரவியது.

மதுரை ஆதீனம், "நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த குல்லா அணிந்த இருவர் என்னை கொலை செய்ய முயற்சித்தனர்" என்று அப்போது தெரிவித்தார். அவருடைய டிரைவரும் உதவியாளருமான செல்வகுமாரும் இந்த தகவலை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தார்.

இந்த விவகாரம் முதலமைச்சர் கவனத்துக்கு சென்று, டிஜிபிக்கு உத்தரவிட, உடனே இந்த சம்பவத்தை விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி உத்தரவிட, உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனத்தின் கார்தான் அதிவேகமாக சென்று விபத்தினை ஏறடுத்தியதாக தெரிய வந்தது.

இது சம்பந்தமான வீடியோ வெளியாகியதால் ஆதீனம் சொன்ன குற்றச்சாட்டு விமர்சனத்துக்குள்ளாகியது. இந்த நிலையில் விபத்து ஏற்படுத்த பார்த்த குற்றச்சாட்டில் ஆதீனத்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

மதுரை ஆதீனம்

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனத்தின் டிரைவர் செல்வக்குமாரிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆதீனம் பொய்யான புகார் கூறி பாரம்பரிய மடத்தின் பெருமையை சீர்குலைக்கிறார் என்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் புகார் தெரிவித்து, அவரை மதுரை ஆதீனப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் என்பவர், சென்னை மாநகர ஆணையருக்கு அனுப்பிய புகாரில் "மதுரை ஆதீனம் பொய்யான குற்றாச்சாட்டுகள் மூலம் இரு மதத்தவர்கிடையே வெறுப்புணர்வை, பகை உணர்வைத் தூண்டுகிறார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும், மத நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும், அதனால் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

மதுரை ஆதீனம்

இப்புகார் சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திறகு இடையில் பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல, பொய்யான தகவல் பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் காவல்துறையின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்