உங்களுக்கு சாலையோரம் விற்கப்படும் பஜ்ஜி மற்றும் போண்டாவை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அங்கே பயன்படுத்திய செய்தித்தாளில் உணவு பொருள்களை வைத்து கொடுப்பார்கள். வேறு வழி இல்லை என்று நாமும் சிறிது நேரத்திற்கு அந்த உணவுகளை செய்தித்தாளில் வைத்து சாப்பிட்டு இருப்போம்.
சிறிது நேரம் தானே அப்படி அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து சாப்பிடுகிறோம், இதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதில் தான் பிரச்னையே... சமீபத்தில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 'உணவு வணிகர்கள் இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவுப்பொருட்களை விநியோகிக்கக்கூடாது’ என்றிருக்கிறது.
மேலும், ‘அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருட்கள் நேரடியாக படும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது. குறிப்பாக, உணவுப்பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது; உணவகங்களில் உணவு பரிமாற வாழையிலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை.
அச்சிடப்பட்ட செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட்டால் என்னவிதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். “சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப்பொருள்களை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது பழைய நியூஸ் பேப்பரில் வைத்து கொடுக்கிறார்கள்.
இவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நாம் உட்கொள்வதினால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, அந்த நியூஸ் பேப்பர் பிரிண்ட் செய்வதற்காக மையை பயன்படுத்துவார்கள். அந்த மையில் 2-நாப்தைலமைன் மற்றும் 4-அமினோபிஃபீனைல் (2-naphthylamine and 4-aminobiphenyl) போன்ற ரசாயனங்கள் இருக்கும். இவ்வாறு ரசாயனங்கள் அடங்கிய நியூஸ் பேப்பரில் நாம் சூடான பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் கலந்த உணவு பொருள்களை வைத்து சாப்பிடும்போது, அந்த உணவில் இந்த ரசாயனங்கள் எளிதாக கலந்து விடும். இவ்வாறாக தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், உணவு பாதுகாப்புத்துறை அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்லது நியூஸ் பேப்பர்களில் உள்ள ரசாயனம் உணவில் கலந்து உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டாவது விஷயம் என்னவென்றால், முறையான பேக்கிங் எதுவும் இல்லாமல் உணவுப்பொருட்களை கொடுப்பதினால் எளிதாக வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று அந்த உணவில் கடத்தப்படும்.
இந்தியா போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்பு, உணவை சுத்தமான முறையில் பரிமாறுவது, உணவைப் பரிமாறும் போது கைகளை சுத்தமாக கழுதல் என்பது மிக மிக குறைவு. உணவை பரிமாறவும், பேக்கேஜிங் செய்யவும் இலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கண்ணாடி குடுவைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக பிளாஸ்டிக், நியூஸ் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதாக கிருமித்தொற்றுகள் கடத்தப்படும். மேலும் உடல் நலத்திற்கும் அது தீங்கும் விளைவிக்கக்கூடும்.
உணவு பாதுகாப்புத்துறை சொல்வது போல உணவுகளை நியூஸ் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்டவற்றில் வைத்து சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். சிந்தித்து அதற்கான மாற்று வழியை பயன்படுத்துவோம்” என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Vikatan Latest news

0 கருத்துகள்