கோடைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும்.
இப்படி அசௌகரியத்தை ஏற்படுத்தும் இடுக்குத்தொடை பிரச்னை ஏன் வருகிறது; அதனால் என்ன பாதிப்பு ஏற்படும், சரிசெய்ய என்ன வழி என்பதைப்பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சக்தி சரண்யா.
''இடுக்குத்தொடை பிரச்னை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பூஞ்சைத்தொற்றுதான். தொடை இடுக்கில் உருவாகும் அதிக வியர்வையின் ஈரப்பதத்தால் இந்த பூஞ்சைத்தொற்று உருவாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்படலாம்.
மேலும் தொடை இடுக்கில் உள்ள தசைப்பகுதிகள் ஒன்றோடு ஒன்று உராயும்போது, அந்த இடத்தில் இருக்கும் தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு பாதிக்கப்படும். தோல் செல்களின் தடுப்பு செயல்பாடு என்பது, நம் தோலின் ஈரத்தன்மையை காப்பதுடன், வெளியிலிருந்து வரும் கிருமிகள் உடலுக்குள் செல்லாமல் ஒரு பாதுகாப்பு கோட்டையாக செயல்படும்.
பெரும்பாலும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படலாம். காரணம் அவர்களுக்கு தொடைப்பகுதியில் அதிகளவு தசை மடிப்புகள் இருக்கும். அந்த மடிப்புகளில் காற்று புகாமல் வியர்வை ஈரப்பதம் உலராமல் எப்போதும் இருப்பதால் பூஞ்சை ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்படும்.
காற்று நுழையாத அளவுக்கு தடிமனான உடைகள் அணியும்போதும், இறுக்கமாக உடைகள், உள்ளாடைகள் அணியும்போதும் கூட இந்த பிரச்னை ஏற்படலாம்.
வெயில் காலத்தில் சிலருக்கு அதிகளவு வியர்க்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால், ஈரமில்லாமல் உடலைத் துடைத்து பின் ஈரமில்லாத துணிகளை அணிந்தால் இந்த பிரச்னை வராமல் தடுக்கலாம்.
ஒருவேளை வந்துவிட்டால், இதற்கென இருக்கிற சோப்பை பயன்படுத்தலாம். அப்படியும் குணமாகவில்லை எனில், தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது கட்டாயம். தவிர, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வந்தால், அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது.
பெரும்பாலும் இந்தத்தொற்று ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் மருத்தவரை அணுகி தொற்றின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இது உடல் முழுக்க பரவக்கூடும். அப்படி நிகழ்ந்தால் குணப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். இந்த தொற்று பிறருக்கும் பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்டவரின் உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
தொடைப்பகுதி என்பதால் உடலுறவில் ஈடுபடும்போது துணைக்கும் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே தொற்று பாதிப்பு இருக்கும்போது உடலுறவைத் தவிர்த்தால் தொற்று பரவலை தவிர்க்க முடியும்'' என்கிறார் டாக்டர் சக்தி சரண்யா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Vikatan Latest news

0 கருத்துகள்