கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் ஆடி 18 தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் பக்தர்கள் முன்னோர் மற்றும் மறைந்த உறவினர்களுக்கு உணவு, பழங்கள் படையலிட்டு வழிபடுவார்கள்.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு தான். அதன்படி இந்தாண்டும் முன்னோர்களுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற படையலிடும் உணவுகள் வீணாக குப்பைக்கு தான் செல்லும்.
கோவையில் தன்னார்வலர்களின் முயற்சியால் அந்த உணவுகள் சேகரிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பேரூர் பேரூராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, No Food Waste அமைப்பினர் இணைந்து சுமார் 2 டன் பழங்கள் மற்றும் தேங்காய், காய்கறி உள்ளிட்ட உணவுகளை சேகரித்தனர்.
பிறகு அவற்றை அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கினார்கள். பிளாஸ்டிக் கழிவுகளும் தனியாக பிரிக்கப்பட்டன.
இதுகுறித்து களப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், “கோவை பேரூர் படித்துறையில் படையல் கொடுக்க மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். உணவு வீணடிக்கப்படுவதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக இங்கு வீணாகும் உணவை சேகரித்து ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஏழை மக்களின் பசியாற்றுவதுடன், தூய்மை பணியாளர்களின் சுமையை குறைப்பதில் மனம் நிறைவடைகிறது.” என்றனர்.
from India News https://ift.tt/CQ6Nqc7
via IFTTT

0 கருத்துகள்