Header Ads Widget

டெல்லி: 11 வயது சிறுமியை பள்ளிக் கழிவறைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சீனியர் மாணவர்கள்!

தலைநகர் டெல்லியில் பிரபல பள்ளியொன்றில் படித்து வந்த 11 வயது சிறுமியை, பள்ளிக் கழிவறைக்குள் வைத்து 11,12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை முன்னெடுத்த பிறகே, கடந்த செவ்வாயன்று பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸை அணுகி புகார் தெரிவித்திருக்கிறார். சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், உடனடியாக சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்தனர். மேலும், மகளிர் ஆணையமும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி, நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் ஏன் புகாரளிக்கவில்லை எனக் கேள்வியெழுப்பியிருந்தது.

பாலியல் வன்கொடுமை

ஆனால், அந்தப் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகளோ, ``இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம். ஆனால், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியோ அல்லது அவர் குடும்பத்தினரோ எங்களிடம் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை. டெல்லி மகளிர் ஆணையம் மற்றும் போலீஸார் மூலமே இந்த விவகாரம் எங்களின் கவனத்துக்கு வந்தது. போலீஸாரின் சட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்கின்றனர்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் அறிக்கையின்படி, ``கடந்த ஜூலை மாதத்தில் சிறுமி தன் வகுப்புக்குச் செல்லும் வழியில் தெரியாமல் அதே பள்ளியில் 11,12-ம் வகுப்பு படிக்கும் இரு சீனியர் மாணவர்கள்மீது மோதியிருக்கிறார். அதற்காகச் சிறுமி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையிலும் அவர்கள் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்துச் சென்று, கதவை உள்பக்கமாக அடைத்துவிட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஆசிரியர்கள் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டதாகக் கூறி அந்தச் சிறுமியை அமைதிப்படுத்தியிருக்கின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்