தீபாவளி பண்டிகையை கார்கிலில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வரும் பிரதமர் மோடி, "இந்திய ராணுவ வீரர்கள் எனது குடும்பம்" என்று தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இந்தாண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) காலை கார்கில் வந்தார். அங்கு அவர் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, ''என்னைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள் அனைவரும் எனது குடும்பமாக இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது ஒரு பாக்கியம். இதை விட சிறந்த தீபாவளியை என்னால் கொண்டாடியிருக்க முடியாது. என் உற்சாகம், பலம் உங்களுடன் இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்கிலில் நடந்த யுத்தம், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நமது எல்லைகளை ஆயுதப்படைகள் பாதுகாப்பதால் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். உங்களின் தியாகங்கள் எப்பொழுதும் நம் நாட்டை பெருமைப்படுத்துகின்றன'' என்று அவர் உரையாற்றினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்