Header Ads Widget

``அதிருப்தியில் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர்; விரைவில் பாஜக-வில் சேருவர்” - உத்தவ் தரப்பு

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு தனிபெயரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தனிப்பெயரும் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜக-வின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 22 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் சேரப்போவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தலையங்க அறிக்கையில், ``மகாராஷ்டிராவில் தற்காலிக ஏற்பாடாகத்தான் முதல்வரை பாஜக நியமித்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

முதல்வர் பதவி எந்த நேரம் வேண்டுமானாலும் பிடுங்கப்படலாம் என்று அனைவருக்கும் தெரியும். ஷிண்டே அணி அந்தேரி கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம். ஆனால் பாஜக அதனை தடுத்துவிட்டது. கிராம பஞ்சாயத்து மற்றும் சார்பஞ்ச் தேர்தலில் ஷிண்டே அணியினர் வெற்றி பெற்றதாக கூறப்படுவது உண்மையில்லை. ஏக்நாத் ஷிண்டே மீது 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவர். ஷிண்டே தனக்கும், மகாராஷ்டிராவிற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். மகாராஷ்டிரா ஷிண்டேயை ஒரு போதும் மன்னிக்காது. பாஜக தனது தேவைக்கு ஷிண்டேயை பயன்படுத்தி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

உத்தவ், ஏக்நாத் ஷிண்டே

பாஜக நிர்வாகி ஒருவர், அரசு ஷிண்டேயின் 40 எம்.எல்.ஏ.க்கள் மூலமே செயல்படுகிறது. ஆனால் 40 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டத்தையும் சாம்னா சுட்டிக்காட்டி இருக்கிறது. அரசின் அனைத்து முடிவுகளையும் துணை முதல்வர்தான் எடுக்கிறார். முதல்வர் அதனை அறிவிக்க மட்டுமே செய்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே ஒளரங்காபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் உத்தவ் தாக்கரேயின் இப்பயணத்தை ஆடம்பர பயணம் என்று ஏக்நாஷ் ஷிண்டே அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே திடீரென கட்சியில் இருந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு சூரத் சென்றுவிட்டார். அங்கிருந்து அஸ்ஸாம் சென்று இதர சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 40 எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுத்துக்கொண்டு பாஜகவுடன் சேர்ந்து ஷிண்டே புதிய அரசை அமைத்திருக்கிறார். அதோடு சிவசேனா தங்களது அணிக்குத்தான் சொந்தம் என்று கூறியதால் சிவசேனாவின் சின்னமான வில் அம்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டுள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்