Header Ads Widget

ரஜினிக்கு 'குட்டு' வைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் - இனி பிரபலங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்களா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்ப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் மிகக் கடுமையாக மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இருப்பினும் அப்போதைய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை

விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நடிகர் ரஜினிக்கு 'குட்டு' வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக துப்பாக்கிச் சூடுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்தார். பிறகு சென்னை திரும்பிய அவர், "போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர், இதன் காரணமாகவே கலவரம் ஏற்பட்டது" எனக் கூறி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் நீதிபதி

இந்நிலையில், இது தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கப்பட்டு உள்ளது. அதில், “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று, தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் ரஜினி மட்டும் அல்லாது சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி வரும் சில பிரபலங்களுக்கு வைக்கப்பட்டுள்ள 'குட்டு' டாகவே பலரும் பார்க்கின்றனர்.

இதற்கு சில பிரபலங்கள் சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது கருத்துக்களைப் பேசி வருவதே காரணமாகும். எனவே தான் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல், "பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" எனப் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.

'பொறியாளர்' சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்த்த ஜி.சுந்தர்ராஜனிடம் பேசினோம், "அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம் மிகவும் முக்கியமானது. மக்கள் 100 நாட்களாக அமைதியாகப் போராடினார்கள். யாரும் சென்று பார்க்கவில்லை. எப்படி துப்பாக்கிச் சூடு நடந்தது என்று அறிக்கையே சொல்கிறது. அப்போது சமூக விரோதிகள் கலவரம் செய்தார்கள் என்று கூறியது உண்மைக்கு புறம்பானது. பிறகு ஆணையத்திடம் சென்று அதற்கான தரவுகள் என்னிடம் இல்லை என்று கூறியது இன்னும் மோசமான விஷயம். எனவே, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல், 'கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்