Header Ads Widget

`அது எருமை மாடு... இது பசு மாடு' - இரண்டாவது முறையாக மாடுகள் மோதி சேதமான `வந்தே பாரத் ரயில்!'

குஜராத்தில் கடந்த ஒன்றாம் தேதி நாட்டின் அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த சில நாள்களில் அந்த ரயில் மும்பையிலிருந்து காந்தி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எருமை மாடுகள் தண்டவாளத்தில் புகுந்ததால் அவற்றின்மீது மோதி ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. சேதமடைந்த பகுதி உடனே சரி செய்யப்பட்டு மீண்டும் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை தொடங்கியது. ரயில் தண்டவாளத்தில் எருமை மாடுகளை விட்ட மாட்டு உரிமையாளர்கள்மீது குஜராத் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

எருமை மாடு மோதி சேதம் அடைந்தது

இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாது என்றும், இது போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டுதான் ரயில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் முனைப்பகுதியை முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த ரயில் காந்தி நகரிலிருந்து மும்பை நோக்கி வந்த போது மீண்டும் விபத்தில் சிக்கியிருக்கிறது. ரயில் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் என்ற இடத்துக்கு அருகே வந்தபோது ரயில் தண்டவாளத்தில் பசு மாடு ஒன்று புகுந்துவிட்டது.

பசு மாடு மோதி சேதம் அடைந்தது

அந்த பசு மாட்டின்மீது ரயில் மோதிக்கொண்டது. இதில் ரயிலின் முன் பகுதி அதாவது ஏற்கெனவே நடந்த விபத்தில் சேதமடைந்து சரி செய்யப்பட்ட பகுதி மீண்டும் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இந்த ரயிலையே முழுமையாக இயக்க முடியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அடுத்த கட்டமாக மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை எப்படி இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்