ஸ்ரீரங்கத்தில் 3 வயது குழந்தையை கடத்திய பெண்ணிடமிருந்து 24 மணி நேரத்தில் போலீஸார் மீட்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் இ.பி ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், முருகன் வேறொரு திருமணம் செய்து கொண்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். முருகனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த 3 வயதேயான ராகவன், அவனது பாட்டி சம்பூர்ணம் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே விளையாட சென்றபோது ராகவன் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி சம்பூர்ணம் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் போலீஸார் அந்த சிறுவனை தேடி வந்தனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை திருச்சி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அந்த சிறுவன் சமயபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாக நின்று கொண்டிருப்பதை அறிந்த சமயபுரம் காவல்துறையினர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதைப்பற்றி ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் அங்கு வந்த ராகவன் காவல்துறையினரிடம் சிறுவனை ஒப்படைத்தனர். மேலும் அந்த சிறுவனை ஒரு பெண் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் யார்? எதற்காக அழைத்துச் சென்றார் என்பது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவனை பெண் ஒருவர் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி சிறுவனை கடத்திச் சென்ற பெண் தன்னை போலீஸ் நெருங்கி விட்டதால் சமயபுரத்தில் இக்குழந்தையை விட்டுவிட்டு சென்றாரா? இல்லை வேறு ஏதும் தகவல் கிடைத்து காவல்துறையிடம் சிக்கி விடுவோம் என தப்பித்து சென்றாரா? எதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து இந்த குழந்தையை கடத்தி சமயபுரத்தில் கொண்டு விட்டு சென்றார்? இதுபோல் இவர் மற்ற குழந்தைகளை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு விற்று உள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்