Header Ads Widget

Doctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தக்கசிவு.... மூலநோயா, புற்றுநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 32. கடந்த சில வருடங்களாக மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுகிறது. இதை மூலநோய் என எடுத்துக்கொள்வதா? சிலர் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அதற்கு வாய்ப்புண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

மூலநோய் என்பது ஆசனவாய்க்கு வெளியே வரும் ஒரு பாதிப்பு. மூலநோய் பாதிப்பின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். சிலருக்கு குடலில் புற்றுநோய் இருந்தாலும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம்.

எனவே நீங்கள் கொலோனோஸ்கோப்பி என்ற பரிசோதனையைச் செய்துபார்த்தால் குடலில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது உறுதியாகும்.

அனைத்துவகை மூலநோய் பாதிப்புகளும் புற்றுநோயாக இருக்கவோ, அப்படி மாறவோ வாய்ப்புகள் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம். குறிப்பாக வெளிமூலம் என்பது புற்றுநோயாக இருக்க வாய்ப்பே இல்லை. அது சாதாரண ரத்தக்குழாய் வீக்கம், அவ்வளவுதான்.

ரத்தக்கசிவு

தொண்டைவழியே குழாயைச் செலுத்திச் செய்யப்படுவது எண்டோஸ்கோப்பி. அதுபோலவே ஆசனவாய் வழியே குழாயைச் செலுத்திச் செய்யப்படுகிற சோதனைதான் கொலோனோஸ்கோப்பி. இது புற்றுநோய் பாதிப்பை உறுதி செய்யும். மலம் கழிக்கும்போது தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மூலநோயாக இருக்கும் என அவர்களாக ஒரு முடிவுக்கும் வரக்கூடாது. மேற்குறிப்பிட்ட சோதனையை அவசியம் செய்து பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்