நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ், கெளரி. இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். திண்டுக்கல் வடமதுரை அருகே செங்குளத்துபட்டியில் இவர்களின் தூரத்து உறவினர் ராஜேஷ்குமார் அவரது மனைவி கீர்த்திகா உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. ராஜேஷ்குமார் கட்டட வேலை பார்த்துவருகிறார்.

இவர்கள் தூரத்து உறவினர்களாக இருந்தபோதிலும், நெருங்கி பழகியுள்ளனர். மேலும் குழந்தையில்லாத காரணத்தால் ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி, ஷிவானியிடம் அன்பு காட்டியுள்ளனர். இதனால் அடிக்கடி திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்து பிரகாஷ் வீட்டில் இருந்துவிட்டு ஷிவானியை அடிக்கடி திண்டுக்கல் அழைத்து வந்து தங்களுடன் தங்க வைத்திருக்கின்றனர்.
ஷிவானியும் அவர்களிடம் மிகவும் அன்பாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தீபாவளிக்கு ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி பல்லடம் சென்றுவிட்டு ஷிவானியை திண்டுக்கல் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் ஷிவானி வழுக்கி விழுந்து காயமடைந்துவிட்டதாகக் கூறி அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த ஷிவானி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தான் குழந்தை உயிரிழந்த தகவலறிந்த பிரகாஷ், கெளரி தம்பதி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாரிடம் விசாரித்தோம். ”ராஜேஷ்குமாரின் உறவினர் பல்லடத்தில் உள்ள செங்கல் சூளையில் பிரகாஷ், கெளரியுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். அவர்களை பார்க்க பல்லடத்திற்கு வந்தபோது தான், பிரகாஷ் குடும்பத்துடன் நெருங்கி பழகியுள்ளனர். ஒருவகையில் தூரத்து உறவினர்களாகவும் இருந்துள்ளனர். இந்தப் பழக்கம் குழந்தையை திண்டுக்கல்லுக்கு அழைத்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தீபாவளிக்கு அழைத்து சென்றவர்கள் தொடர்ந்து குழந்தையை தங்களுடனே வைத்து கொண்டிருந்திருகின்றனர். இதற்கிடையே வழக்கமான குழந்தைகளை போல சுட்டியாக சேட்டைகள் செய்துள்ளார். இதை கீர்த்திகா கடுமையாக கண்டித்திருக்கிறார். தொடர்ச்சியாக சொல் பேச்சு கேட்காமல் இருந்த குழந்தையை தாக்க தொடங்கியுள்ளார்.
`நாயுடன் விளையாடாதே இல்லையென்றால் கடித்துவிடும்’ எனக் கூறியவர், குழந்தைய கடித்துவிட்டு, `சொல் பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால் இப்படி தான் கடிக்கும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த நிலையில் தீக்கட்டையால் குழந்தைக்கு சூடு வைத்துள்ளார். இதில் மிகவும் படுகாயமடைந்த குழந்தை படுத்தபடுக்கையான பிறகே வேறு வழியின்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

4 நாள்களாக பிரகாஷ், கெளரி குழந்தையிடம் பேச முயன்றபோதும் பல்வேறு காரணங்களை கூறி நடந்ததை மறைத்துள்ளனர். குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கீர்த்திகா, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். இதனால் தான் ஒரு குழந்தை உயிர் பறிபோகியுள்ளது. எனவே இதில் தொடர்புடைய ராஜேஷ்குமார், கீர்த்திகா கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
from Latest News
0 கருத்துகள்